தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் 74 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்பு
வாக்காளர் பட்டியிலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் இடமாற்றம் அடைந்து நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள விண்ணப்பம் 6ஆம் எண் படிவத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

Published : December 12, 2025 at 7:48 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதில் 74 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2002ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த மாதம் நவம்பர் 4ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் டிசம்பர் 4ஆம் தேதி வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை பெறுவதற்கான பணிகள் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான அட்டவணையை திருத்தி புதிய அட்டவணையை கடந்த நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன் பிறகு டிசம்பர் 12 (இன்று) முதல் 15ஆம் தேதி வரை அட்டவணை புதுப்பித்தல் மற்றும் வரைவு பட்டியல் தயாரித்தல் பணிகள் நடைபெறும்.
இப்பணிகளுக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடப்படும். அந்த பட்டியிலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள டிசம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 15 வரை கால அவகாசம் வழங்கப்படும். பின்னர் அவை ஜனவரி 16 முதல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் சரிபார்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, நேற்று (டிச.11) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான அட்டவணையை திருத்தி புதிய அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் முந்தைய திருத்த அட்டவணையில், வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் கொடுப்பதற்கான காலம் டிசம்பர் 11 வரையும், வரைவுத் தேர்தல் பட்டியலை வெளியிடும் தேதி வருகிற 16 என்றும் இருந்ததாகவும், அதை திருத்தி வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் கொடுப்பதற்கான காலம் வருகிற 14ஆம் தேதி வரை என்றும், வரைவுத் தேர்தல் பட்டியலை வெளியிடும் தேதி வருகிற 19 என்றும் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒரே மாதத்தில் இந்த பணிகளை முடிப்பதற்காக, 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் களத்தில் பணியாற்றினர். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2,46,069 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் நேற்று வரை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், 6 கோடியே 41லட்சத்து 13 ஆயிரத்து 772 வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் 100.0% விநியோகிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவ்வாறு விநியோகிக்கப்பட்ட படிவங்களில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 221 வாக்காளர்கள் படிவங்கள் பதிவேற்றம் செய்து 100.00% நிறைவு அடைந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல்
மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், வாக்காளர் பட்டியிலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பம் 6ஆம் எண் படிவத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியல் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதில் 74 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதில் இடமாற்றம் அடைந்தவர்கள் 40 லட்சம் வரை உள்ளதாகவும், 30 லட்சம் வரை இறந்தவர்கள் பெயர் உள்ளதாகவும் தெரிகிறது. இரட்டைப் பதிவு 4 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என தெரிகிறது. இதில் இடமாற்றம் அடைந்து நீக்கப்பட்டவர்கள் விண்ணப்பம் 6 படிவத்தை பயன்படுத்தி புதிதாக மீண்டும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
| இதையும் படிங்க: டிஎஸ்பியை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி பணியிடை நீக்கம் - உயர் நீதிமன்ற பதிவாளர் அதிரடி |
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடிகளை மறுசீரமைத்தல் பணியை மேற்கொள்ளப்பட்டன. வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு முன், மாநிலத்தில் 68,467 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்காளர் எண்ணிக்கை 1200க்கும் மேல் இருந்தால் புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்குதல் உள்ளிட்ட மறுசீரமைப்புக்குப் பிறகு மாநிலத்தில் இப்போது 75,035 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

