நேபாளம் சென்ற மூதாட்டி மாயம் - மத்திய, மாநில அரசுக்கு குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை
நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற மூதாட்டி குறித்து இந்திய தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தகவலை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published : August 27, 2026 at 8:11 PM IST
திருவண்ணாமலை: நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற மூதாட்டி மாயமான நிலையில், அவரை மீட்க நடவடிககை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான இந்தியர்கள் மாயமாகினர். இந்த நிலையில், ஆரணி பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்ற 69 வயது மூதாட்டி, ஆன்மீக சுற்றுலாவாக நேபாளம் சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் குடும்பத்தினருக்கு சரியாக கிடைக்கவில்லை. நிர்மலா தற்போது எங்கு இருக்கிறார், யாருடைய பாதுகாப்பில் உள்ளார், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாத நிலை நிலவுகிறது.
அவரது குடும்பத்தினர், நிர்மலாவை தொடர்பு கொள்ள பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்ட போதிலும், அவரைப் பற்றிய உறுதியான தகவல் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் நாளுக்கு நாள் அச்சமும், கவலையும் அடைந்து வருகின்றனர். நிர்மலாவுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
மத்திய மற்றும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்து அவரை கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அவர்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
| இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய 148 தமிழர்களின் நிலை என்ன? ஆன்மீக சொற்பொழிவாளர் வெளியிட்ட வீடியோ |
மேலும், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிர்மலா குறித்த தகவல்களைத் தேடும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவரது பயண விவரங்கள், அவர் சென்ற இடங்கள், கடைசியாக தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டால், நிர்மலா இருக்கும் இடத்தை விரைவாக கண்டறிய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

