இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க கால தாமதம்; ஆட்டோ ஏஜென்சி நிறுவனம் ரூ.60,000 நஷ்டஈடு வழங்க உத்தரவு
குறைதீர் ஆணையத்தின் விசாரணையின் முடிவில், தனியார் ஆட்டோ ஏஜென்சி நிறுவனம் ‘சேவை குறைபாடு’ மற்றும் ‘முறையற்ற வாணிபம்’ செய்தது உறுதி செய்யப்பட்டது.

Published : June 3, 2026 at 9:14 PM IST
திருநெல்வேலி: இருசக்கர வாகனத்தை பழுதுபார்க்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுவிட்டு 69 நாட்கள் தாமதம் செய்த தனியார் ஆட்டோ ஏஜென்சி நிறுவனம், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளருக்கு 60,000 ரூபாய் நஷ்டஈடு வழங்க திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கலியாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2018-ம் ஆண்டு பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் உள்ள விஜய் ஆட்டோ என்ற தனியார் நிறுவனத்தில், இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியிருந்தார். கிராமத்தில் முறையான பேருந்து வசதி இல்லாததால் தனது அன்றாடக் கூலி வேலைக்குச் செல்ல இந்த வாகனத்தையே அவர் முழுமையாக நம்பியிருந்தார்.
| இதையும் படிங்க.. 88 நாட்களாகியும் காவல் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லை; அமைச்சர் நிர்மல் குமாரிடம் முறையிட்ட ஆகாஷ் டெலிசன் உறவினர்கள் |
இந்நிலையில் கடந்த 01.08.2025 அன்று கண்ணன் வாகனத்தில் வேலைக்கு சென்றபோது, வாகனம் பாதியிலேயே பழுதாகி நின்றது. மறுநாள் அந்த வாகனத்தை, தாம் வாங்கிய தனியார் ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்தில் பழுதுபார்க்க ஒப்படைத்தார். அங்கிருந்த ஊழியர்கள் இரண்டு நாட்களில் வாகனத்தைச் சரி செய்து திருப்பித் தருவதாக உறுதியளித்தனர்.
ஆனால், சொன்னபடி வண்டியை பழுது பார்த்து திருப்பிக் கொடுக்காமல் ‘பாகங்கள் வரவில்லை’, ‘ஆர்டர் செய்துள்ளோம்’ எனப் பல்வேறு காரணங்களைக் கூறி, சுமார் 69 நாட்கள் கண்ணனை அலைக்கழித்துள்ளனர். முறையான எஸ்டிமேஷன் கூட வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருசக்கர வாகனம் இல்லாததால், கண்ணன் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளார். ஒரு நாளைக்கு 700 ரூபாய் வீதம் அவருக்கு 48,300 ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டதுடன், கடும் மன உளைச்சலுக்கும் அவர் ஆளானார்.
இதையடுத்து, வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கண்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஆணையத் தலைவர் பிறவிப்பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில், "தனியார் ஆட்டோ ஏஜென்சி நிறுவனம் ‘சேவை குறைபாடு’ மற்றும் ‘முறையற்ற வாணிபம்’ செய்தது உறுதி செய்யப்பட்டது.
| இதையும் படிங்க.. விஜய் அண்ணா எங்களுக்கு தாய்மாமன் சீர் வேண்டாம் டாஸ்மாக் கடையை மூடினால் போதும்; பெண்கள் வைத்த 'சபாஷ்' கோரிக்கை |
சேவை குறைபாடு, வாழ்வாதார இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு கண்ணனுக்கு இழப்பீடாக 50,000 ரூபாயும், வழக்குச் செலவிற்காக 10,000 ரூபாயும் தனியார் ஆட்டோ ஏஜென்சி நிறுவனம் வழங்க வேண்டும் என்றும், கண்ணன் பழுது பார்க்கும் கட்டணமான 27,008 ரூபாயை செலுத்தியதும் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி அவரது வாகனத்தை ஓடும் நிலையில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும், இந்த உத்தரவை 45 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறினால் 9 சதவீத வட்டியுடன் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும் என்றும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

