''பாமக நிர்வாகியை கொல்ல முயன்ற சம்பவம்'' - கைது செய்யப்பட்ட 15 பேரில் 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு!
ம.க.ஸ்டாலின் நைசாக தனது அறையில் உள்ள கழிப்பறைக்குள் சென்றுவிட்டார். பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளே நுழைந்த கும்பல் ம.க.ஸ்டாலின் தனது இருக்கையில் இல்லாததை அறிந்ததும் உடனே அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுவிட்டது.

Published : October 15, 2025 at 11:05 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை மேலமருத்துவக்குடி பகுதியை சேர்ந்த பாமக நிர்வாகியை கொல்ல முயன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 15 பேரில் 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை மேலமருத்துவக்குடி பகுதியை சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். ஆடுதுறை பேரூராட்சி தலைவரான இவர், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் இருக்கும் தனது அறையில் ம.க.ஸ்டாலின் அமர்ந்து இருந்தார். அவரது ஆதரவாளர்களான இளையராஜா (42), அருண் (25) ஆகியோர் வெளியில் இருந்தனர்.
அப்போது, திடீரென ஒரு காரில் வந்த 8 பேர் முகமூடி அணிந்து அலுவலகத்தில் புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில், பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த நாற்காலி மற்றும் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற கும்பலை தடுக்க முயன்ற இளையராஜா, அருண் ஆகியோரை அவர்கள் அரிவாளால் வெட்டினர். இதை கண்டு அதிர்ச்சியும், அச்சமும் அடைந்த ம.க.ஸ்டாலின் நைசாக தனது அறையில் உள்ள கழிப்பறைக்குள் சென்றுவிட்டார்.

பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளே நுழைந்த கும்பல் ம.க.ஸ்டாலின் தனது இருக்கையில் இல்லாததை அறிந்ததும் உடனே அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுவிட்டது. இதுகுறித்து அருண் அளித்த தகவலின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த இருவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 15 நபர்களை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த குற்ற சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட இரு கார்கள், 4 இருசக்கர வாகனங்கள், 6 பட்டா கத்திகள், 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
| இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜுக்கு நீதிமன்றம் ஜாமீன்! |
தமிழகம் தழுவிய அளவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் இச்சம்பவம் ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின்பேரில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 15 பேரில் முக்கிய குற்றவாளிகளான ஆகாஷ் (எ) ஹரிஹரன், மருதுபாண்டியன், மகேஷ், திருவிடைமருதூர் ரயில்வே சாலையை சேர்ந்த சேரன், பிச்சை கட்டளையை சேர்ந்த சஞ்சய், கும்பகோணம் பாணாதுறை பகுதியை சேர்ந்த விஜய் ஆகிய 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

