ETV Bharat / state

கரூர் அரசு கலைக் கல்லூரியில் 5-வது நாளாக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கல்லூரி பொறுப்பு முதல்வரை கண்டித்து நாளைய தினம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் வாயிற்முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 2, 2026 at 8:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கரூர்: பேராசிரியர் மீதான பாலியல் புகாரில் மாணவர்களுக்கு எதிராகவும், ஆசிரியர்களுக்கு எதிராகவும் செயல்படும் கல்லூரி பொறுப்பு முதல்வரை மாற்றக் கோரி 5 ஆவது நாளாக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலை (தன்னாட்சி) கல்லூரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தது தொடர்பாக, சக மாணவர்கள் கல்லூரி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியதால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் (ETV Bharat Tamil Nadu)

ஆனால், பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் 13 கல்லூரி மாணவர்கள் மீது தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரியும், 3 மாதங்கள் கடந்த பிறகும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத கல்லூரி பொறுப்பு முதல்வரை கண்டித்தும், கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை முதல் கல்லூரி வளாகத்திற்குள் தமிழக அரசு கலைக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் கரூர் கிளை தலைவர் பிரபாகரன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியது.

அதன்படி, 5-வது நாளாக இரவு பகல் பாராமல் கல்லூரி வளாகத்துக்குள் நடந்து வரும் உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாவது நாளான இன்றைய போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இதில் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் லிவிங்ஸ்டன், “தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி பொறுப்பு முதல்வரை கண்டித்து, வாயில் முழக்கப் போராட்டங்கள் இன்று தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட 13 அரசுக் கல்லூரிகளில் நடைபெற்றது.

கரூர் அரசு கலைக் கல்லூரியில் 5 நாட்களாக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பாலியல் குற்றச்சாட்டு சாட்டப்பட்ட பேராசிரியரை பாதுகாக்கும் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி பொறுப்பு முதல்வர், மாணவியின் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருச்சி மண்டல விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு புதிதாக வேறு ஒரு விசாரணை அதிகாரி, இப்பிரச்சினை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் மாணவர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்கள். காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. பொறுப்பு முதல்வரின் தூண்டுதல் பேரில் தான் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும், மாணவர் விரோத போக்கை திட்டமிட்டு கடைபிடிக்கும் போக்கை கைவிட வேண்டும்.

இதையும் படிங்க: தவெக கூட்டணியில் காங்கிரஸ்? சி.டி.ஆர். நிர்மல்குமார் கொடுத்த 'அப்டேட்'

கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் மீது பதியப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும், பொறுப்பு முதல்வர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.

மேலும், “கல்லூரி பொறுப்பு முதல்வரை கண்டித்து நாளைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் வாயிற்முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும்” என்றும் அவர் கூறினார்.