தி.நகரில் 50 வயது உறவினருடன் 17 வயது சிறுமி விபரீத முடிவு - போலீசார் விசாரணை
உறுவினர்களான நபரும், சிறுமியும் விபரீத முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published : July 4, 2026 at 10:09 AM IST
சென்னை: சென்னை தி.நகரில் உறவினர்களான ஆட்டோ ஓட்டுநரும், சிறுமியும் உயிரை மாய்த்துகொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகர் ராஜபள்ளி தோட்டம் பகுதியில் வாடகை வீட்டில் ஆனந்தன் (50) என்பவர் திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர், சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரின் உறவினரான 17 வயது சிறுமி நேற்று மாலை அவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இருவரும் வீட்டில் இருந்த நிலையில், ஆனந்தனின் சகோதரர் பாண்டுரங்கன், ஆனந்தனுக்கு சாப்பாடு வழங்குவதற்காக இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்துள்ளார்.
கதவை தட்டியும் பதில் இல்லாத காரணத்தினால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ஆனந்தனும், சிறுமியும் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து உடனடியாக சென்னை செளந்தரபாண்டியனார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த செளந்தரபாண்டியனார் காவல் நிலைய போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களாக ஆனந்தனும், அவரின் உறவினரான சிறுமியும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் பழக்கம் குறித்து குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால், இரு தரப்பிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, குடும்பத்தில் பிரச்சினையும் வந்ததாக தெரியவந்துள்ளது.
| இதையும் படிங்க: வழக்கு விவரங்களை தாக்கல் செய்யாத மத்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி |
மேலும், அந்த சிறுமி இரண்டு முறை தனது வீட்டிலிருந்து வெளியேறி, ஆனந்தனுடன் சில நாட்கள் தங்கி வந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த 15 நாட்களாக ஆனந்தன் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் அவர் தனியாக இருந்தபோது விபரீத முடிவு எடுக்க முயன்றதாகவும், அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றியதாகவும் செளந்தரபாண்டியனார் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இந்த விபரீத முடிவை மன உளைச்சல் காரணமாக எடுத்தார்களா அல்லது குடும்பத்தினரிடையே வேறு ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் தெளிவான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
’தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல’
வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம்.
இதேபோல், சிநேகா தொண்டு நிறுவனத்தை +91 44 2464 0050, +91 44 2464 0060 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது help@snehaindia.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம். டாடா நிறுவனத்தின் 91529 87821 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.

