ETV Bharat / state

கச்சத்தீவு ஆலய திருவிழா நாளை தொடக்கம்: தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

கச்சத்தீவு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக, ராமேஸ்வரத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவு ஆலய திருவிழா
கச்சத்தீவு ஆலய திருவிழா (ETV Bharat Tamil Nau)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 26, 2026 at 7:57 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ராமேஸ்வரம்: கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்காக நாளை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து பக்தர்கள் கச்சத்தீவு புறப்பட்டு செல்கின்றனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையில் இருந்து 16 கடல் மைல் தொலைவிலும் என நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இப்படி, இந்தியா - இலங்கை இடையே உள்ள கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா இரு நாட்டு மக்களையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக வருடந்தோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற பிப்ரவரி 27 மற்றும் 28 என இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக, நாளை (பிப்.27) மாலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் புனித கொடி ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு, தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். நாளை மறுநாள் காலையில், சிறப்பு திருப்பலிக்கு பிறகு தேவாலயத்தில் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடையும். இதில் தமிழ்நாட்டில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

தமிழகத்தில் இருந்து கச்சத்தீவுக்கு பக்தர் செல்லவுள்ள கப்பல்
தமிழகத்தில் இருந்து கச்சத்தீவுக்கு பக்தர் செல்லவுள்ள கப்பல் (ETV Bharat Tamil Nau)

இந்த நிலையில், நாளை காலை 7 மணி முதல் ராமேஸ்வரத்திலிருந்து பக்தர்கள் படகில் புறப்பட்டுச் செல்ல உள்ளனர். கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் முதல் படகினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுப்பி வைக்க உள்ளனர். விழாவை முன்னிட்டு, நேற்று முதல் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கூட்டங்களுக்கு அனுமதி தருவதில் பாரபட்சம்; தவெக தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

முன்னதாக, கச்சத்தீவு செல்லும் பக்தர்களின் உடைமைகளை பரிசோதிக்க போலீசார் தயார் நிலையில் உள்ளனர். புனித அந்தோணியார் கோயில் தேர் திருவிழாவை ஒட்டி இலங்கையிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும், தமிழகத்திலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 13ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகப்பட்டு, உரிய விசாரணைக்குப் பின்னர் 4,000 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவு ஆலய திருவிழா:

கச்சத்தீவு ஆலய திருவிழா
கச்சத்தீவு ஆலய திருவிழா (ETV Bharat Tamil Nau)

1974 ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டாலும், அங்குள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா இரு நாட்டு மக்களையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதைக் கண்டித்து, இந்திய பக்தர்கள் கச்சத்தீவு செல்வதைப் புறக்கணித்தனர். அதன் பின்னர், கடந்த ஆண்டு இலங்கை அரசின் அழைப்பின் பேரில், 78 மீன்பிடி படகுகள் மூலம் 3 ஆயிரத்து 464 இந்தியப் பக்தர்கள் சென்றனர்.