ETV Bharat / state

24 மணி நேரத்தில் 4kW மின்சார இணைப்பு பெறலாம் - த.வெ.க அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றம் என்ன?

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு வீட்டில் இருந்து 100 மீட்டர் தாெலைவிற்குள் மின் இணைப்பு வழங்குவதற்கான கம்பம் உள்ளதை ஜிபிஎஸ் அல்லது ஜிஐஎஸ் செயலி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (X/@TANGEDCO_Offcl)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 30, 2026 at 7:04 PM IST

3 Min Read
Choose ETV Bharat

By எஸ். ரவிச்சந்திரன்

சென்னை: 4 கிலோ வாட் (kW) சிங்கிள் மின் இணைப்பை 24 மணிநேரத்தில் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் உள்ள வீடுகள், சிறுக்கடைகள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் உபயோகத்திற்கு 4 கிலோ வாட் சிங்கிள் மின் இணைப்பை, அதிகாரிகளின் நேரடி கள ஆய்வு இல்லாமல் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின் இணைப்பைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணபிப்பது எப்படி?
விண்ணபிப்பது எப்படி? (ETV Bharat Tamil Nadu)

வீட்டுக் குடியிருப்பிற்கான மின் இணைப்பு, தொழில்துறைக்கான மின் இணைப்பு, மின் நுகர்வோரின் பெயர் மாற்றம், தற்காலிக மின் இணைப்பு, விவசாயத்திற்கான மின் இணைப்பு, கூடுதல் லோடு உள்ளிட்ட மின்சாரம் சம்மந்தப்பட்ட அனைத்திற்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://app1.tangedco.org/nsconline/index.xhtml என்ற இணையத்தை அணுகலாம்.

புதிய மின் இணைப்பு மற்றும் மற்ற மின்சாரச் சேவைகளுக்கும் மின் நுகர்வோரின் ஆதார் எண் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். மின்சார சேவை தொடர்பான குறைகள் மற்றும் சந்தேகங்களையும் மேற்கண்ட இணையதளம் மூலம் தெரியப்படுத்தி அதனை நிவர்த்தி செய்துக் கொள்ளலாம். இதனால் மின்சார வாரிய அலுவலகத்திற்கு மின் நுகர்வோர்கள் செல்லத் தேவையில்லை.

வீடுகளுக்கு 4 கிலோ வாட் வரை சிங்கிள் மின் இணைப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழியர் ஒருவர் கூறுகையில், "மின் இணைப்புக் கோரி விண்ணப்பிக்கும் மின் நுகர்வோர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் உத்தரவு ஆகும்.

விண்ணப்பம் செய்த பிறகு சம்மந்தப்பட்ட வீட்டில் மின் இணைப்பு வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளதா? என்பதை வணிக ஆய்வாளர் நேரில் சென்றுப் பார்வையிட்டு ஆய்வுச் செய்வார். அதைத் தொடர்ந்து, ஆய்வாளர் அளிக்கும் தகவலின்படி, களப்பணியாளர் நேரில் சென்று மின் மீட்டரைப் மின் இணைப்பை வழங்குவார். அப்போது மின் இணைப்பு எண் வழங்கப்படும்.

4kW மின்சார இணைப்பு என்றால் என்ன?
4kW மின்சார இணைப்பு என்றால் என்ன? (ETV Bharat Tamil Nadu)

பயன்பாட்டிற்கு ஏற்ப கிலோ வாட் மாற்றப்படும்

ஏற்கனவே வீடுகளுக்கு 3 கிலோ வாட் வரையில் சிங்கிள் மின் இணைப்பு வழங்கி வந்தோம். தற்போது 4 கிலோ வாட் வரை சிங்கிள் மின் இணைப்பு வழங்கலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு 4 கிலோ வாட் வரையில் சிங்கிள் மின் இணைப்பில் மின்சாரம் செல்லும் வகையில் மீட்டரில் மாற்றம் செய்வோம். வீட்டிலோ அல்லது கடையிலோ ஏசி, பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்கள் குறிப்பிட்ட நேரம் இயங்கினால் எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறது? என்பது தெரிந்துவிடும்.

மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் எத்தனை கிலோ வாட் மின்சாரம் வழங்கலாம் என்பதை முடிவுச் செய்து மீட்டரில் மாற்றம் செய்வோம். வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாதனப் பொருட்களின் விபரத்தைக் கணக்கிட்டு எத்தனை கிலோ வாட் தேவை என்பதை மின் நுகர்வோர் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு ஆய்வு செய்து மின் இணைப்பை வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பார்கள்; எனினும், மின் இணைப்பு பெறுவதற்கான ஒருமுறை செலுத்தும் கட்டணத்தில் மட்டுமே மாற்றம் இருக்கும்.

மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும் என்று கூறினாலும் இடத்தை ஆய்வுச் செய்யாமல் மின் இணைப்புக் கொடுக்க முடியாது என்பதால் விண்ணப்பித்த ஓரிரு நாட்களில் மின் இணைப்பை அதிகாரிகள் வழங்குவார்கள்" என்றார்.

24 மணி நேரத்தில் மின் இணைப்பு

விண்ணப்பித்த பின் என்ன நடக்கும்?
விண்ணப்பித்த பின் என்ன நடக்கும்? (ETV Bharat Tamil Nadu)

தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காந்தி கூறுகையில், "மின்சார வாரியத்தின் விதிமுறைகளின்படி மின் இணைப்புகள் 24 மணி நேரத்தில் வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. விண்ணப்பத்தில் திருத்தம் இருந்தாலும் ஏழு நாட்களுக்குள் அதனை சரி செய்து இணைப்பு வழங்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கு முன்னர் வீட்டில் இருந்து 100 மீட்டர் தாெலைவிற்குள் மின் இணைப்பு வழங்குவதற்கான கம்பம் உள்ளதை லோகேசன் ஜிபிஎஸ் அல்லது ஜிஐஎஸ் செயலி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: 4 கிலோ வாட் வீட்டு மின் இணைப்பு - ஆக.28 முதல் புதிய முறை அறிமுகம்

அதில் தவறு இருந்தால் இணைப்புக் கொடுக்க முடியாது. மின் இணைப்பு வழங்குவதற்கான காரணம் சரியாகக் கண்டறிந்தப் பின்னர் தான் வீட்டு மின் இணைப்பு வழங்க முடியும். மின் இணைப்பு வழங்குவதற்கு முன்பு அந்த இடத்தை மின்சார வாரிய அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் தான் மின் இணைப்பு வழங்க வேண்டும்.

மின்சார வைப்புத்தொகை 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கவில்லை என்றால் திருப்பி தரப்படாது என்பது விதி மீறலாகும். களத்தில் அனுபவம் இல்லாமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.