ETV Bharat / state

ஓசூரில் அரசு அதிகாரி, கார் ஏற்றி கொலை; கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

இளைஞர் காரால் மோதிய சம்பவத்தில் அரசு அதிகாரி உயிரிழந்த நிலையில், 6 மாத குழந்தை உட்பட மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட காட்சி
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட காட்சி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : February 24, 2026 at 5:17 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கிருஷ்ணகிரி: ஓசூரில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், திமுக நிர்வாகி மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள அன்னை அரவிந்தர் நகரை சேர்ந்தவர் சிவமூர்த்தி (55). ஓசூரில் உள்ள தொழிலாளர் நலத் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவருக்கு, கிருபாகரன் (35), பாஸ்கர் (33) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், அன்னை அரவிந்தர் நகர் வழியாக காரில் வந்த இளைஞர்கள், சிவமூர்த்தியின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை எடுக்க தொடர்ச்சியாக ஹார்ன் அடித்துள்ளனர். அந்த சத்தத்தைக் கேட்ட சிவமூர்த்தி, அவரது மகன் கிருபாகரன் மற்றும் கிருபாகரனின் மனைவி அம்சவேணி மற்றும் அவர்களது 6 மாத குழந்தையுடன் வெளியே வந்து பார்த்துள்ளார்.

உயிரிழந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர்
உயிரிழந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் (ETV Bharat Tamil Nadu)

அப்போது, இரு சக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது, காரில் வந்த இளைஞர்களுக்கும், சிவமூர்த்தியின் குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், கீழே கிடந்த கட்டையை எடுத்து சிவமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தாரை தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில், கோபம் அடைந்த இளைஞர் ஒருவர், காரை வேகமாக ஓட்டிச் சென்று சிவமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வேகமாக மோதியுள்ளார். அதனால், மூன்று பேருக்கு பலத்த காயமும், குழந்தைக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், பலத்த காயமடைந்த சிவமூர்த்தி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஆதித்யா, ஹரீஸ், ரித்திக்குமார்
கைது செய்யப்பட்ட ஆதித்யா, ஹரீஸ், ரித்திக்குமார் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: பாலக்காடு ஐஐடியில் தமிழக மாணவி மீது தாக்குதல்.. கேரளாவில் பயங்கரம்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் நகர போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது, அரசு ஊழியர் சிவமூர்த்தியை காரை ஏற்றி கொலை செய்தது, ஓசூர் வசந்த் நகர் பகுதியை சேர்ந்த திமுக மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் மகன் ஆதித்யா (20) என்பதும், இவர் தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது.

இதையடுத்து, ஆதித்யா மற்றும் காரில் அவருடன் இருந்த ரித்திக்குமார் (19), ஹரீஸ் (19) ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், சம்பந்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு மூவரும் தருமபுரி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.