ETV Bharat / state

“மறுபிறவி எடுத்து வந்துள்ளோம்... நான்கு நாட்களில் தப்பித்தோம்” - நேபாள வெள்ளத்தில் இருந்து மீட்டு வந்த தமிழர்கள் திகில் பேட்டி

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு நாங்கள் பார்த்த இடங்கள் அழகாக இருந்தன, அதற்கு பின்னர் அந்த இடங்கள் அப்படி இல்லை என்று நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேட்டியளித்துள்ளனர்.

நேபாளத்தில் சிக்கி திரும்பிய தமிழர்களுக்கு வரவேற்பு
நேபாளத்தில் சிக்கி திரும்பிய தமிழர்களுக்கு வரவேற்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : September 1, 2026 at 5:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

கோயம்புத்தூர்: மறுபிறவி எடுத்து வந்துள்ளோம், நான்கு நாட்களில் தப்பித்தோம் என்று நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த தமிழர்கள் தங்களின் திகில் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல நூறு உயிர்களை பலிகொண்டுள்ள இந்த இயற்கை பேரிடர் உலகையே அதிர்ச்சி உறைய வைத்துள்ளது.

முன்னதாக கைலாய யாத்திரைக்காக தமிழ்நாட்டை சேர்ந்த 305 பேர் நேபாளத்திற்கு சென்றதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேரவையில் நேற்று தெரிவித்திருந்தார். அவர்களில் 220 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.

கோவை திரும்பிய 28 தமிழர்கள்

இந்நிலையில், கைலாய யாத்திரைக்காக தமிழ்நாட்டில் இருந்து சென்ற 28 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (செப்டம்பர் 1) காலை கோவை வந்தடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து தப்பி பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்பியவர்களை, அவர்களது உறவினர்கள் மலர்கள் கொடுத்து, கண்ணீர் மல்க வரவேற்றனர்.

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

நேபாள வெள்ள பாதிப்பில் இருந்து தப்பிய தமது திகில் அனுபவம் குறித்து சத்தியமங்கலத்தை சேர்ந்த ரதி என்பவர் பேசியபோது, “பெருவெள்ளம் ஏற்பட்ட இடத்தை நான்கு நாட்களுக்கு முன்னர் தான் கடந்து சென்றோம். நான்கு நாட்களுக்கு பிறகு அந்த பகுதியே இருக்காது என நினைக்கவில்லை. செய்தி பார்த்தபோது மனவேதனை அடைந்தோம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டது. அவ்வபோது எங்களை தொடர்பு கொண்டு எங்களது நலன் குறித்து விசாரித்தனர். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் எங்களை பற்றி அதிகம் கவலைப்பட்டனர். எப்போது வருவோம் என நினைத்தனர். சீனாவின் உதவியுடன் நேபாளம் வந்து டெல்லி வந்தோம்” என்று தெரிவித்தார்.

மறுபிறவி எடுத்து வந்துள்ளோம்

தொடர்ந்து, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிவனடியார் லோகநாதன் கூறியபோது, “ஆகஸ்ட் 18-ஆம் தேதி இங்கிருந்து கிளம்பினோம். ஆகஸ்ட் 26-ஆம் தேதி விபத்து நடந்தது. இதனால் மிகுந்த கவலை அடைந்தோம். இறைவன் அருளால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் மறுபிறவி எடுத்து திரும்பி வந்துள்ளோம். இந்த சூழலில் சிவன் எங்களை காப்பாற்றிய நிலையில் நாங்கள் தங்கியிருந்த விடுதியில் இறைவனை நினைத்து வேண்டுதலில் ஈடுபட்டோம்” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.

திருப்பூரை சார்ந்த தீபலட்சுமி கூறியபோது, "நாங்கள் அந்த இடத்தை தாண்டி தரிசனம் செய்து கொண்டு இருந்தபோது, இந்த சம்பவம் குறித்து தகவல் வந்தது. தரிசனம் செய்த சந்தோஷத்தை விட இந்த பேரிடர் சம்பவம் எங்களை சோகத்தில் ஆழ்த்தியது. கற்பனை செய்து பார்ப்பதற்கு கூட பயங்கரமாக இருந்தது. பெரு வெள்ளம் மக்களை அடித்துச் செல்லும்போது நாங்கள் அந்த இடத்தில் இருக்கும்போது நடந்திருந்தால் எப்படி இருக்கும் என அச்சம் ஏற்பட்டது.

நாங்கள் செல்லும்போது அழகாக இருந்த இடங்கள் இப்போது வேறு மாதிரியாக உள்ளது. நேபாளத்தில் இருந்து நாங்கள் திரும்ப வர அரசு ஏற்பாடு செய்திருந்தது. எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் பயந்துவிட்டனர். மீண்டும் பெருவெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தால் அவர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஃபோன் செய்து கொண்டு இருந்தனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 84 தமிழர்களை தொடர்புகொள்ள முடியவில்லை – பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் அவினாசியை சார்ந்த மோகனா என்பவர் கூறியபோது, “தூதரகம் சென்று சோதனைகளை முடித்துவிட்டு கோயிலுக்கு சென்றோம். எங்களைப் போன்று யாத்திரை வந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக திரும்பிச் சென்றிருந்தால் நாங்களும் சந்தோஷமாக இருந்திருப்போம். அந்த இடத்தில் நாங்கள் இருந்தபோது அந்த சம்பவம் நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக உள்ளது.

நைலம் வழியாக நேபாளம் வந்து பின்னர் டெல்லி வந்தோம். பேரிடர் ஏற்படும் முன்பு நாங்கள் பார்த்த காட்சிகள் மிகவும் அழகானவை. நாங்கள் அங்கு புகைப்படம் எடுத்தோம். இப்போது அந்த இடம் இல்லை. அதனை புகைப்படமாக எடுத்து வைத்திருக்கிறோம். அதை பார்க்கும் தைரியம் கூட இல்லை. வீடியோவை பார்க்கும்போது எங்களை வெள்ளம் அடித்து செல்வது போலவே இருந்தது. மீண்டும் செல்ல வாய்ப்பு இருந்தால் கைலாய நாதர் கோயிலுக்கு செல்வேன்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.