ETV Bharat / state

தவெக அரசுக்கு எதிராக 24 மணி நேரமும் பொய் பிரச்சாரம் - பீட்டர் அல்போன்ஸ்

முதலமைச்சர் விஜய் காமராஜரை கொள்கை தலைவராக வைத்து ஊழலற்ற ஆட்சியை தருவதாக உறுதியளித்துள்ளதால், காங்கிரஸ் கட்சி அவரை ஆதரிப்பதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு
நிகழ்ச்சியில் பீட்டர் அல்போன்ஸ் பேச்சு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 8, 2026 at 10:47 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: தவெக அரசு இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் 24 மணி நேரமும் சிலர் பொய் பிரச்சாரம் செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை சத்தியமூர்த்தி பவனில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு 'நெஞ்சம் நிமிர் லஞ்சம் தவிர்' என்ற ஒலி நாடாவை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட அதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள்
நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் (ETV Bharat Tamil Nadu)

நிகழ்ச்சியில் பேசிய பீட்டர் அல்போன்ஸ், "இன்று மிக முக்கியமான‌ நாள். அன்றைய தலைவர் கக்கனுடன் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீனாட்சி கோவிலில் நுழைந்த நாள் தான்‌ ஜூலை 8. காங்கிரஸ் ஆட்சியை இழந்த பிறகு கட்சியில் இணைந்தேன். நான் காமராஜர் ஆட்சியை பார்த்தது இல்லை. காமராஜர் ஆட்சியில் தாசில்தார் ரூ. 300 ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கையில் விளங்கிட்டு உட்கார வைக்கப்பட்டார். இன்று 3 லட்சம் கோடியை முழுங்கிவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் இருக்கின்றனர். அனில் அம்பானி நாற்பதாயிரம் கோடி பணத்தை அரசுக்கு திருப்பி கட்டவில்லை. ஆனால் பிரதமர் மோடி அவரை விமானத்தில் அழைத்து சென்று பிரான்சில் விடுகிறார்.

முதலமைச்சர் விஜய் காமராஜரை கொள்கை தலைவராக வைத்து ஊழலற்ற ஆட்சியை தருகிறேன் என தெரிவிக்கிறார். காமராஜர் வழியில் ஊழலற்ற ஆட்சியை தருகிறோம் என சொன்னதால் காங்கிரஸ் கட்சி விஜய்யை ஆதரிக்கிறோம். லஞ்சம் குறித்த பல நாட்களாக யாரும் பேசவில்லை. 'லஞ்சம் தவிர நெஞ்சம் நிமிர்' என சொல்வதற்கு காங்கிரசுக்கு என்ன தகுதி இருக்கிறது என பாஜக தலைவர் கேள்வி கேட்கிறார். இதற்கு இந்தியாவிலேயே தகுதியான கட்சி காங்கிரஸ் கட்சி மட்டுமே" என்றார்.

நிகழ்ச்சியில் விஜய் வசந்த் பேச்சு
நிகழ்ச்சியில் விஜய் வசந்த் பேச்சு (ETV Bharat Tamil Nadu)

முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசியதாவது, "காமராஜருக்கு புகழ் சேர்க்கும் வகையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஆடியோ பாடல் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. எனது முதல் அரசியல் ஆடியோ லாஞ்ச் இதுதான். பாடல் எழுதிய அப்துல் சலாம் உட்பட டீமிற்கு நன்றிகள். காமராஜர் பிறந்தநாளில் நடக்கும் நிகழ்வில் இந்த பாடலை ஒலிக்க செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது, "ஜூலை 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை இந்த கையெழுத்து இயக்கம் செயல்படும். 13-ஆம் தேதி காமராஜர் சிற்பம் மெரினாவில் வைக்கப்படும், அதை தலைவர் திறந்து வைப்பார். ஊழலற்ற நிர்வாகம் பற்றி பேசுவதற்கு காமராஜர் பெயரை தவிர வேறு யார் பெயரை பயன்படுத்த முடியும் என நயினார் நாகேந்திரன் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் சமீபகாலமாக இந்த அரசு இருக்கக்கூடாது என நினைப்பவர்கள் தங்கள் ஆதரவு ஊடகங்களை வைத்துக்கொண்டு, அரசின் அமைச்சர்கள் என்ன செய்தாலும் தவறு என 24 மணி நேரமும் பொய் பிரச்சாரத்தை செய்கிறார்கள், அரசாங்கத்தை இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்கிறார்கள். சின்ன சம்பவத்தை ஊதி பெரிதாக்க நினைக்கிறார்கள், நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்" என தெரிவித்தார்.