கத்தி முனையில் நகை வியாபாரியிடம் கொள்ளை; முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்
கொள்ளையடிக்கப்பட்ட 2 கிலோ நகைகளின் மதிப்பு சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் என தகவல் வெளியாகியுள்ளது.

Published : March 3, 2026 at 6:58 PM IST
விழுப்புரம்: நகை வியாபாரியிடம் கத்தி முனையில் ரூ.3.40 கோடி மதிப்பிலான இரண்டு கிலோ தங்க நகைகளை முகமூடி கொள்ளையர்கள் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நகை தொழில் செய்பவர் ராஜமாணிக்கம். இவர் சென்னையில் இருந்து வாங்கி வந்த 2 கிலோ அளவிலான தங்க கட்டிகளை ஜிமிக்கி, மோதிரம் போன்ற நகைகளாக செய்துள்ளார். இந்நிலையில், நகைகளை பேக்கில் எடுத்து கொண்டு, விழுப்புரத்தில் இருந்து சென்னை புறப்பட தயாரானார்.
இதற்காக, வீட்டில் இருந்து கிளம்பிய ராஜமாணிக்கம், கோட்டை விநாயகர் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல், திடீரென ராஜமாணிக்கத்தை இடைமறித்துள்ளனர். தொடர்ந்து, கத்தியை காட்டி மிரட்டிய அந்த கும்பல், ராஜமாணிக்கத்திடம் இருந்த 2 கிலோ தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், நகைகளை பறிகொடுத்து விட்டு செய்வதறியாது தவித்த ராஜமாணிக்கம், உடனடியாக விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த விழுப்புரம் எஸ்பி சாய் பிரனீத் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து, 2 கிலோ தங்க நகையை கொள்ளையடித்த கும்பலை தேடி வருகின்றனர். அதேசமயம், ராஜமாணிக்கத்திடம் பணி புரிந்து வரும் 15 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.3 கோடியே 40 லட்சம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

