ETV Bharat / state

செஞ்சியில் பர்த் டே சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

முதற்கட்ட விசாரணையில், மாணவர் விநியோகித்த சாக்லேட்டுகள் காலாவதியாகி ஓராண்டுகள் ஆனது தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் மாணவர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 3, 2026 at 3:52 PM IST

1 Min Read
Choose ETV Bharat

விழுப்புரம்: பிறந்த நாளில் சக மாணவர் வழங்கப்பட்ட சாக்லேட்டை சாப்பிட்ட 18 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியில், இன்று (ஜூலை 3) காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சாக்லேட் சாப்பிட்ட 6 ஆம் வகுப்பு மாணவர்கள் 18 பேர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக வகுப்பு மாணவர்களுக்கு சாக்லேட்டுகளை வழங்கியுள்ளார். அதனை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதில் எதிர்பாராதவிதமாக சில மாணவர்கள் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததால் பள்ளி வளாகத்தில் பெரும் பதற்றமும், அச்சமும் நிலவியது. மாணவர்களின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட 18 மாணவர்களையும் மீட்டுச் செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழு, அவர்களுக்கு 'உணவு நச்சுத்தன்மை' (Food Poisoning) ஏற்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து உடனடியாக மாணவர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

தற்போது மாணவர்கள் அனைவரும் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்கு ராகுல் காந்தி பிரதமராக வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் - அமைச்சர் ராஜேஷ்குமார் கருத்து

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த செஞ்சி போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மாணவர் விநியோகித்த சாக்லேட்டுகள் காலாவதியாகி ஓராண்டுகள் ஆனது தெரிய வந்துள்ளது. இவ்வளவு காலம் கடந்த காலாவதியான சாக்லேட்டுகள் கடைகளில் விற்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஆகையால், இதை விற்பனைச் செய்தவரிடம் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டுள்ளது. முக்கியமாக, இந்த சாக்லேட் போலியானதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சாக்லேட் சாப்பிட்டு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், பெற்றோர்கள் பதற்றத்துடன் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால், அங்கு சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.