ETV Bharat / state

சரக்கு வாகனத்துடன் 18 குட்கா மூட்டைகள் பறிமுதல்- இருவர் கைது

தருமபுரி வழியாகச் செல்லும் வாகனங்களை காவல்துறையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

குட்கா மூட்டைகள் பறிமுதல்
குட்கா மூட்டைகள் பறிமுதல் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 6, 2026 at 10:51 PM IST

1 Min Read
Choose ETV Bharat

தருமபுரி: பெங்களூரூவில் இருந்து கடத்தி வரப்பட்ட 18 மூட்டை குட்காவை வாகனத்துடன் பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரை கைது செய்தனர்.

தருமபுரி வழியாக பெங்களூரூவில் இருந்து சேலம், கோயம்புத்தூர், கேரளா போன்ற பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அவ்வப்போது கடத்திச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் சேலம்- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டர்பிளை மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த பெங்களூரூ பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த வாகனத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, 18 மூட்டைகளில் சுமார் 200 கிலோ இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் இருந்த மற்றொருவர் என இருவரைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

அதில், கர்நாடகா மாநிலம், மங்களூரூ பகுதியைச் சேர்ந்த முகமது சககீன் மற்றும் ரஷீத் ஆகிய இருவரும் பெங்களூரூ பகுதியில் இருந்து கோயம்புத்தூருக்கு குட்கா பொருட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 18 மூட்டை குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தருமபுரி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களை காவல்துறையினர் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தி வருகின்றனர்.