ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது சிறுமி மாயம்; 3 நாட்கள் ஆகியும் கிடைக்காததால் பெற்றோர் கலக்கம்
மாணவியைக் கடத்திச் சென்றதாக கருதப்படும் மணி என்பவர் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Published : June 3, 2026 at 11:02 PM IST
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய சிறுமி கடத்தப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்கப்படாததால் அச்சிறுமியின் தாய் மற்றும் பாட்டி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவர், பத்துக்கும் மேற்பட்ட ஆட்களை வைத்து வீடு கட்டும் தொழில் செய்து வருகிறார். மேலும், இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த பெண் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த நிலையில், சமீபத்தில் அவரை ஒரு கல்லூரியில் சேர்த்துள்ளார்.
இந்த நிலையில், முத்துக்கருப்பனிடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொத்தனாராக வேலை பார்த்து வந்த ஸ்ரீவைகுண்டம் கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த 33 வயதான மணி என்பவர், தன்னுடைய மூத்த மகளைக் கடத்திச் சென்றதாக முத்துக்கருப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், மாணவியை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், மாணவி கடத்தப்பட்டு மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை அவரை போலீஸார் கண்டுபிடிக்கவில்லை. மேலும், மாணவி குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்காமல் உள்ளது.

இதனால் மேலும் அச்சமடைந்த அந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்களைக் கூட்டிக் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இன்று (ஜூன் 3) திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடத்தப்பட்ட தங்களது மகளை உடனடியாக மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும், கடத்தலில் ஈடுபட்ட மணி உள்ளிட்ட மூன்று பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக, தனது மகளுக்கு என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இது எங்களுக்கு அச்சமாக உள்ளது. ஆகையால், காவல்துறையினர் விரைந்து இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
| இதையும் படிங்க: முதல்வரின் உருவச்சிலைக்கு வீட்டில் தினமும் பூஜை; 'தெறி'க்கவிடும் விஜய்யின் 'வெறி'த்தனமான திருச்சி ரசிகர் |
முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்திக்கும் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கடத்தப்பட்ட மாணவியின் தாய் மற்றும் பாட்டி கண்ணீர் மல்க மாணவியை உடனடியாக மீட்க வேண்டும் என தரையில் புரண்டு அழுத சம்பவம், பார்ப்போரை கலங்கச் செய்யும் வகையில் அமைந்தது.
மேலும், மாணவியைக் கடத்திச் சென்றதாக கூறப்படும் மணி என்பவர் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

