நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகள் தீவிரம்; 150-க்கும் மேற்பட்டோர் விரைவில் தமிழகம் வருகை?
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களில் 90- க்கும் மேற்பட்டோரை அடையாளம் காண முடியவில்லை எனவும், 319 தமிழர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Published : August 29, 2026 at 9:55 PM IST
By: ஹூசைன்
சென்னை: நேபாளத்தில் சிக்கியுள்ள 150 தமிழர்கள் தாயகம் திரும்பத் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 26- ஆம் தேதி அன்று இமயமலையில் இருந்து ராட்சத பனிப்பாறை விழுந்ததில் நேபாளத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதில் ரசுவா, நுவாகோட், தாடிங் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள், நட்சத்திர விடுதிகள், சாலைகள், பாலங்கள், மேம்பாலங்கள், இரும்பு பாலங்கள் போன்றவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் நேபாளமே நிலைகுலைந்து போய் உள்ளது.
600-ஐ கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை
நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. சுமார் 2,000- க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சுமார் 4,000- க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் வெள்ளம் பாதித்த இடங்கள் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கும் நிலையில் ஆங்காங்கே கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதேபோல், ஆறுகளின் நீரோட்டமும் அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
தமிழர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் தீவிரம்
கைலாஷ் மானசரோவர் ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த குழுக்களைப் பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர்.
அந்த வகையில், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தொடர்புக் கொள்ள ஏதுவாக அவசர உதவி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவிற்குள் இருப்பவர்கள் 1800-309-3793 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புக் கொள்ள 92895-16712 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். அதேபோல், 80-6900-9900 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கலாம் (அல்லது) 80- 6900- 9901 என்ற எண்ணையும் அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை +977-985-131-6807, +977-970-910-7500, +977-981-032-6117 ஆகிய எண்களில் அழைக்கலாம் (அல்லது) வாட்ஸ் அப்பில் தொடர்புக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லியில் அமைச்சர்கள் குழு
கைலாஷ் மானசரோவர் சென்ற இந்திய யாத்ரீகர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகம் எனக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து பயணம் மேற்கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் டூரிஸ் ஏஜென்சி மூலம் சென்றவர்கள். தற்போது நேபாளத்தில் சிக்கியுள்ள அவர்களை விரைந்து மீட்டு தாயகம் அழைத்து வர ஏதுவாக தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவு பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் தென்னரசு ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்றுள்ளது.
அத்துடன், டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை நேரில் சந்தித்த தமிழ்நாடு அமைச்சர்கள் குழு, நேபாளத்தில் நிலவும் சூழல், மீட்புப் பணிகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசித்தது. தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் இருந்தவாறு தமிழர்களின் மீட்பு நடவடிக்கையை அமைச்சர்கள் குழு கண்காணித்து வருகிறது.
தாயகம் திரும்பிய தமிழர்களை வரவேற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக, சென்னையைச் சேர்ந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர், கடலூரைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 9 பேர், மயிலாடுதுறையைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர், திருச்சியைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 21 தமிழர்கள், நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானம் மூலம் டெல்லி திரும்பினர்.
அவர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அவர்களிடம் நேபாளத்தில் தற்போதைய சூழல் குறித்தும், வெள்ளத்தில் இருந்து தப்பித்தது குறித்தும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழர்களை, அமைச்சர்கள் என்.ஆனந்த், சரத்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, அவர்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை
பல்லாவரத்தைச் சேர்ந்த கற்பகம், நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் குறித்தும், சந்தித்த நெருக்கடிகள் குறித்தும் ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "கைலாய மலைக்கு செல்ல வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவு. இதன் காரணமாக கும்பகோணம் யாத்ரா சுற்றுலா நிறுவனம் மூலம் நேபாளம் சென்றோம். என்னுடன் சேர்த்து மொத்தம் 60 பேர் கைலாயத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
கடந்த ஆகஸ்ட் 23- ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து டெல்லி சென்று, அங்கிருந்து காத்மாண்டு சென்றோம். அங்கு சாம்ராட் ஏஜென்சியின் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டோம். இரண்டு குழுக்களாக தலா 60 பேர் வீதம் மொத்தம் 120 பேர் ஆகஸ்ட் 25- ஆம் தேதி காலை கைலாயப் பயணத்தை தொடங்கினோம். பயணம் சென்று கொண்டிருந்தபோது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எங்களைச் சுற்றி பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சத்தில் உறைந்து போயிருந்தோம்.
ஆனால், திடீரென அதீத சத்தத்துடன் சுனாமி போன்று கருமை நிறத்தில் பெரு வெள்ளம் அடித்து வந்து எங்களைச் சூழ்ந்து கொண்டது. நாங்கள் சென்ற வாகனத்தைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. எங்கள் வாகனத்தைப் பாதுகாக்கும் வகையில் முன்னும் பின்னும் இரண்டு வாகனங்கள் இருந்ததால், வெள்ளத்தில் இருந்து நாங்கள் உயிர் பிழைக்க முடிந்தது.
உடனடியாக உடைமைகளை விட்டுவிட்டு பணப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றோம். நாங்கள் இருந்த வாகனத்தைச் சுற்றிலும் அதிக அளவில் சேறும், சகதிகளும் பரவியிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் சேற்றில் இறங்கி, அங்கிருந்தவர்களின் உதவியுடன் மேடான பகுதிக்குச் செல்ல முயன்றோம். மேட்டுப்பகுதியை நோக்கிச் சென்றபோது, கடவுளின் அருளால் அங்கு ஒரு ராணுவ நிவாரண முகாம் இருந்தது. அந்த முகாமில் இருந்த ராணுவ அதிகாரிகள் மூலம் நாங்கள் பத்திரமாக மீட்கப்பட்டோம்.

சம்பவம் நடைபெற்றபோது சில நொடிகளுக்கு எங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது. அந்த தருணத்தில் இருந்து இன்னும் எங்களால் முழுமையாக மீள முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து உதவியாக இருந்ததால்தான் உயிர் பிழைக்க முடிந்தது. கடவுளின் அருளால்தான் நாங்கள் உயிர் பிழைத்ததாக உணர்கிறோம். எங்களுடன் வந்த மற்றவர்களும், உயிருடன் இல்லம் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பு. கடவுளின் அருளால் அவர்களும் இல்லம் திரும்ப வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் மீட்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜ்மோகன், "நேபாளத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். மீட்கப்பட்டவர்கள் நல்லபடியாக சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளனர். ஆனால், அவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீளவில்லை. ஒரு குழுவினர் மூன்று வாகனங்களில் பயணம் செய்துள்ளனர். நடுவில் சென்ற வாகனத்தில்தான் தற்போது மீட்கப்பட்டவர்கள் இருந்துள்ளனர். முன்னால் சென்ற வாகனமும், பின்னால் சென்ற வாகனமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. நடுவில் சென்ற வாகனம் மட்டும் தப்பியது ஒரு அதிசயம் என்றே கூறலாம்.

அதன்பிறகு மிகவும் கடினமான நிலப்பரப்பில் நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் பயணித்து, மற்றொரு இடத்தை அடைந்து அங்கிருந்து மீட்புக் குழுவினருடன் இணைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்கள். அவர்களின் மன உறுதியும், தன்னம்பிக்கையும் பாராட்டத்தக்கது. மிகவும் கடினமான ஒரு இரவை அவர்கள் கழித்த பிறகு, ராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனர். 57 பேர் கொண்ட குழுவில் 21 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை எப்படியாவது தொடர்புக் கொண்டு மீட்பதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசின் வார் ரூமுக்கு சென்ற தமிழ்நாடு அமைச்சர்கள்
தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை மற்றும் வார் ரூம் அமைத்து தொடர்ந்து மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை நேரில் சந்தித்து இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். மத்திய அரசின் வார் ரூமுக்கும் சென்று நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களை எவ்வாறு தொடர்புக் கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பெரிய குழுக்களாக மட்டுமின்றி, ரயில்கள் மூலமாகவும், தனித்தனியாகவும், சிறு சிறு குழுக்களாகவும் பலர் நேபாளத்திற்கு சென்றிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பிட்ட ஒருபகுதியில் மட்டும் 140- க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை மாற்றுப்பாதை வழியாக பாதுகாப்பாக காத்மாண்டுவுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து டெல்லிக்கும் பின்னர் தமிழ்நாட்டிற்கும் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.
400 தமிழர்கள் நேபாளம் பயணம்?
பெரிய குழுக்களில் சென்றவர்களை மட்டுமின்றி, தனியாகவும், சிறிய குழுக்களாகவும், நேபாளம் சென்றுள்ள அனைவரையும் தொடர்புக் கொண்டு மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 400 பேர் வரை நேபாளத்துக்குச் சென்றிருக்கலாம் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. இவர்களில் 319 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 150 பேர் திபெத், காத்மாண்டு வழியாக தாயகம் திரும்ப தயாராகியுள்ளனர். எனினும், 90-க்கும் மேற்பட்டவர்களைத் தொடர்புக் கொள்ள முடியவில்லை. அவர்களைப் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களில் சிலர் குறித்த தகவல்கள் போதுமான அளவில் இல்லை என்பதால் அவர்கள் எங்கு உள்ளனர்? என்பதைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பாக இருக்கும் ஒருவரைக்கூட தவறவிடாமல் அடையாளம் கண்டு, அவர்களை மீட்டு தமிழ்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளருடன் சந்திப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இருப்பிடம், தற்போதைய நிலை மற்றும் தேவைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து வெளியுறவுத்துறைச் செயலாளர் கேட்டறிந்தார். நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களை எவ்வாறு ஒருங்கிணைந்து மீட்பது?, இந்தியாவின் பல்வேறு துறைகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்வது? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
काठमाडौँस्थित भारतीय राजदूतावास @IndiainNepal ले नेपालमा अचानक आएको बाढीबाट प्रभावित भारतीय नागरिकहरूको खोजी तथा उद्धारका लागि नेपाली अधिकारीहरूसँग निरन्तर समन्वय गरिरहेको छ। आज @IndiaInNepal का प्रथम सचिव (वाणिज्य) ले माथिल्लो त्रिशूली १ जलविद्युत् आयोजनाबाट भर्खरै उद्धार गरिएका… https://t.co/gGsiXGEifm
— IndiaInNepal (@IndiaInNepal) August 29, 2026
வெளியுறவுத்துறை சார்பில் செயல்பட்டு வரும் வார் ரூமுக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன? மற்றும் எவ்வாறு மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன? என்பது குறித்தும் விளக்கப்பட்டது. மீட்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லாமல் கூற முடியாது.
இதுவே தமிழ்நாடு அரசின் முதல் பொறுப்பு
முதலில் நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களை அடையாளம் காண்பது, பின்னர் அவர்களின் இருப்பிடம் மற்றும் நிலை குறித்த தகவல்களை உறுதி செய்வது என இரண்டு கட்ட செயல்முறை நடைபெற்று வருகிறது. முதலில் சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து வர வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக அழைத்து வருவதே தமிழ்நாடு அரசின் முதல் பொறுப்பு" எனத் தெரிவித்துள்ளார்.
अचानक आएको भीषण बाढीबाट प्रभावित भएका क्षेत्रका जलविद्युत् सुरुङहरूमा भारतबाट आएको एक विशेष प्राविधिक टोलीले आज स्थलगत निरीक्षण गरेको छ जसले अलपत्र परेका व्यक्तिहरूको शीघ्र खोजी तथा उद्धार कार्यलाई सहज बनाउन मद्दत गर्नेछ।@MEAIndia @IndianDiplomacy @NepaliArmyHQ @navsri6619… https://t.co/Z9DraOqlLR
— IndiaInNepal (@IndiaInNepal) August 29, 2026
நேபாளத்திற்கு தொடர்ந்து நிவாரணப் பொருட்களை அனுப்பும் இந்தியா
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய அரசு சார்பில் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இந்திய விமானப் படையின் விமானங்கள் மூலம் தொடர்ந்து காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று விமானங்கள் மூலம் சுமார் 50 டன்னுக்கும் மேலான நிவாரணப் பொருட்கள், நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஜெனரேட்டர்கள், குடிநீர் பாட்டில்களும் இதில் அடங்கும். நேபாளத்திற்கு நிவாரண உதவிகளை முதலில் அனுப்பிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
Third flight with assistance from India reaches Kathmandu.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 28, 2026
Relief supplies and an 11-member medical and tunnel rescue team are now on the ground.
🇮🇳🇳🇵 pic.twitter.com/7VAGVLKvdg
அதேபோல், மருத்துவர்கள், செவிலியர்கள், மீட்புப் படையினர் என 11 பேர் அடங்கிய இந்திய குழுவினரும் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேபாளத்தில் நிலவும் சூழலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரிகள், இந்தியர்களை மீட்டு தாயகத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

