ETV Bharat / sports

உலகக் கோப்பை நாயகன் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடமில்லை; தேர்வுக் குழு மீது எழும் விமர்சனங்கள்!

ஜிம்பாப்வே டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக அறிமுக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : July 7, 2026 at 10:45 AM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யாதது கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதத்தையும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. தற்போது டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இதற்கிடையே, இத்தொடரை முடித்த கையோடு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடர் ஜூலை 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கிடையே, ஜிம்பாப்வே டி20 தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இந்த அணிக்கு கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும், துணை கேப்டனாக திலக் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்ததுடன், தொடர் நாயகன் விருதையும் வென்ற நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு இந்தத் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் பிளேயிங் லெவனில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது ஏற்கனவே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் அவர் முற்றிலும் நீக்கப்பட்டிருப்பது, இந்தியத் தேர்வுக் குழுவின் மீது கடுமையான விமர்சனங்கள் எழ வழிவகுத்துள்ளது.

மேலும் அக்சர் படேல், ஹர்ஷித் ரானா, ரவி பிஷ்னோய் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக அறிமுக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் மயங்க் யாதவ், யாஷ் தாக்கூர், அசோக் சர்மா, ரிங்கு சிங், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார். இதன் காரணமாக, இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவருக்குப் பதிலாகச் ஷிவம் துபே சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும், இந்திய டி20 அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கான எந்தவொரு காரணத்தையும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாகத் தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஷிவம் தூபே, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார்.

ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணி: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷிவம் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, வருண் சகரவர்த்தி, பிரின்ஸ் யாதவ், யாஷ் தாக்கூர், அசோக் சர்மா, மயங்க் யாதவ், பிரப்சிம்ரன் சிங்.