ETV Bharat / sports

மகளிர் டி20 உலகக் கோப்பை 2026: இங்கிலாந்தை வீழ்த்தி 7ஆவது முறை சாம்பியனானது ஆஸ்திரேலியா!

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியா மகளிர் அணி
ஆஸ்திரேலியா மகளிர் அணி (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 6, 2026 at 9:18 AM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் நடப்பு சீசன் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்றது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேறின. இதையடுத்து நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் தொடக்க வீராங்கனைகளான ஏமி ஜோன்ஸ் 6 ரன்களுக்கும், டேனியல் வையட் ஹாட்ஜ் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் அலிஸ் கேப்ஸி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தியது.

இதில் அலிஸ் கேப்ஸி 23 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்துவந்த ஹீதர் நைட் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் 58 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய ஃபிரேயா கெம்ப் 44 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியில் ஜார்ஜியா வோல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த பெத் மூனி - போப் லிட்ச்ஃபீல்ட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெத் மூனி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தும் அசத்தினார்.பின்னர் 64 ரன்களைச் சேர்த்த நிலையில் பெத் மூனி விக்கெட்டை இழந்தார்.

மறுபக்கம் சிறப்பாக விளையாடி 48 ரன்கள் எடுத்திருந்த போப் லிட்ச்ஃபீல்டுடன், எல்லிஸ் பெர்ரி ஜோடி சேர்ந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த போப் லிட்ச்ஃபீல்ட் 48 ரன்களையும், எல்லிஸ் பெர்ரி 13 ரன்களையும், ஆஷ்லே கார்ட்னர் 3 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்கவும்

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 7ஆவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாகவும் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதுடன், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத் மூனி ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை வென்றார்.