ETV Bharat / sports

விம்பிள்டன் 2026: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி ஜோகோவிச், ஸ்வியாடெக், மேடிசன் கீஸ் அசத்தல்

செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கிரீஸின் நட்சத்திர வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நோவாக் ஜோகோவிச்
நோவாக் ஜோகோவிச் (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : July 3, 2026 at 10:28 AM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: விம்பிள்டன் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று ஆட்டங்களில் முன்னணி நட்சத்திர வீரர்களான நோவக் ஜோகோவிச், இகா ஸ்வியாடெக் மற்றும் மேடிசன் கீஸ் ஆகியோர் நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சிட்சிபாஸை வீழ்த்திய ஜோகோவிச்

உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் நடப்பாண்டு சீசன் இங்கிலாந்தின் லண்டன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரான செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச், கிரீஸ் நாட்டின் முன்னணி வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஜோகோவிச் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அவர், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம், நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி ஜோகோவிச் அசத்தியுள்ளார்.

ஸ்வியாடெக் அசத்தல்

அதே சமயம், நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், நடப்பு சாம்பியனும் உலக நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய ஸ்வியாடெக், முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் மிக எளிதாகக் கைப்பற்றி அசத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த அவர், அதையும் 6-3 என்ற கணக்கில் தன்வசமாக்கினார். மொத்தம் 70 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில், இகா ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.

அடுத்த சுற்றில் மேடிசன் கீஸ்

மற்றொரு விறுவிறுப்பான மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை மேடிசன் கீஸ், பிரிட்டனின் கேட்டி ஸ்வானை எதிர்கொண்டார். இப்போட்டியில் கேட்டி ஸ்வானுக்கு ஆரம்பம் முதலே கடும் நெருக்கடி கொடுத்த மேடிசன் கீஸ், முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் மேடிசன் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, அதையும் 6-4 என்ற கணக்கில் தன்வசமாக்கினார்.

இதையும் படிங்க:

இதன் மூலம் மேடிசன் கீஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கேட்டி ஸ்வானை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.இந்த அதிரடி வெற்றிகளின் மூலம் தங்களது பிரிவுகளில் முத்திரை பதித்துள்ள இந்த மூன்று நட்சத்திர வீரர்களும், நடப்பு விம்பிள்டன் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதனால் அடுத்தடுத்த சுற்றுகளிலும் இவர்களின் வெற்றிப் பயணம் தொடருமா என்ற பெரும் ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.