ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2026: ஜிம்பாப்வேவை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு உறுதியாக இருந்த ஷிம்ரான் ஹெட்மையர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

ஷிம்ரான் ஹெட்மையர் - ரோவ்மன் பாவெல்
ஷிம்ரான் ஹெட்மையர் - ரோவ்மன் பாவெல் (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : February 23, 2026 at 9:00 PM IST

|

Updated : February 23, 2026 at 10:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

மும்பை: வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

வெஸ்ட் இண்டீஸ் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் பிராண்டன் கிங் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 14 ரன்களில் ஷாய் ஹோப்பும் பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மையர் - ரோவ்மன் பாவெல் இணை அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ஷிம்ரான் ஹெட்மையர் 19 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து மிரட்டினார்.

மறுபக்கம் ரோவ்மன் பாவெலும் அரைசதம் அடிக்க, இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர். பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மையர் 7 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 85 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 59 ரன்களை எடுத்த நிலையில் ரோவ்மன் பாவெலும் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களில் ரொமாரியோ ஷெஃபெர்ட் 21 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜேசன் ஹோல்டரும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 31 ரன்களை சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்களை எடுத்தது.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு மருமணி - பிரையன் பென்னெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய மருமணி 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான பிரையன் பென்னெட் 5 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய ரியான் பர்ல் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் இணைந்த தியான் மேயர்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் மேயர்ஸ் 28 ரன்களிலும், கேப்டன் ரஸா 27 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இறுதியில் பிராட் எவான்ஸ் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 43 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.

இதையும் படிங்க

இதனால் ஜிம்பாப்வே அணி 17.4 ஓவர்களில் 147 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 4 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் வெஸ் இண்டீஸ் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Last Updated : February 23, 2026 at 10:54 PM IST