சஞ்சு சாம்சனின் இன்னிங்ஸுக்கு 'ஏ பிளஸ்' ரேட்டிங்: விண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பாராட்டு
சஞ்சு சாம்சன் விளையாடிய விதத்தைப் பொறுத்த வரை நீங்கள் அவருக்கு 'ஏ' பிளஸ் ரேட்டிங் கொடுக்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் பாராட்டியுள்ளார்.


Published : March 2, 2026 at 3:14 PM IST
கொல்கத்தா: ஈடன் கார்டனில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. மறுபக்கம் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இத்தோல்வி காரணமாக, சூப்பர் 8 சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், "இன்றைய தினம் நாங்கள் போதிய அளவு ரன்களை சேர்க்கவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்த மைதானத்தில் இது எட்டக்கூடிய இலக்காக இருந்தது. நாங்கள் தொடக்கத்திலும், இறுதியிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு மேலும் அதிக ரன்களை சேர்த்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, "ஹெட்மையர் களமிறங்கியது முதலே அதிரடியாக தொடங்கினார். அந்த சமயத்தில் நாங்கள் சிறப்பான நிலையில் இருந்ததாக உணர்ந்தோம். ஏனெனில் அணி வீரர்கள் சூழலிற்கு ஏற்ப சிறப்பாக செயல்படுவதை பார்பதற்கு நன்றாக இருந்தது. மேலும் மேத்யூ ஃபோர்ட் மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோரும் பௌலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனாலும் எங்களால் இன்று வெற்றி பெற முடியவில்லை" என்றார்.
அதன் பின் சஞ்சு சாம்சனின் ஆட்டம் குறித்து பாராட்டிய ஷாய் ஹோப், "இன்று சஞ்சு சாம்சன் அருமையான ஒரு ஆட்டத்தை விளையாடினார். ஏனெனில் இதுபோன்ற மைதானத்தில் அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் சேஸிங் செய்யும் போது அது சற்று கடினமாக இருக்கும். ஆனால் அவர் அதைப்பற்றி எதையும் எடுத்துக் கொள்ளாமல் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்” என்று பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சஞ்சு சாம்சன் ஒரு தரமான வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் பல ஆண்டுகளாக இதனை செய்து வருகிறார். இது அவரது விளையாட்டின் ஒரு பகுதி என்றாலும், இன்று அவர் விளையாடிய இன்னிங்ஸுக்கு மிகவும் மதிப்பு மிக்கது. ஏனெனில் இன்று அவரது பேட்டிங் மிகவும் புத்திசாலித்தனமாகவும் கணக்கிடப்பட்டதாகவும் இருந்தது. இன்று அவர் விளையாடிய விதத்தைப் பொறுத்தவரை நீங்கள் அவருக்கு 'ஏ' பிளஸ் ரேட்டிங் கொடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க |
ஷாய் ஹோப் கூறியது போல் சஞ்சு சாம்சனின் இன்னிங்ஸானது இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. ஏனெனில் ஒருபக்கம் மற்ற பேட்டர்களில் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்த நிலையிலும், சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்களை விளாசி வெற்றியை தேடிக்கொடுத்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

