ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2026: தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து - இறுதிப் போட்டிக்கு செல்லப்போவது யார்?

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி 12 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 7 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து
தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : March 3, 2026 at 9:46 PM IST

3 Min Read
Choose ETV Bharat

கொல்கத்தா: ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், சூப்பர் 8 சுற்றுக்கு பிறகு நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் தொடரை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதில் நாளை (மார்ச் 4) நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து, மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி

ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரையிலும் தோல்வியையே தழுவாமல் அரையிறுதி வரை முன்னேறியுளது. அதிலும் குறிப்பாக அணியின் பேட்டிங்கில் ஐடன் மார்க்ரம், குயின்டன் டி காக், ரியான் ரிக்கெல்டன், டெவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் என நட்சத்திர வீரர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.

மறுபக்கம் வேகப்பந்து வீச்சில் லுங்கி இங்கிடி, காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சென் மற்றும் கார்பின் போஷ் ஆகியோரும், சுற்பந்து வீச்சில் கேசவ் மஹாராஜ், ஜார்ஜ் லிண்டே ஆகியோரும் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி தங்களுடையை வெற்றியை தொடர்வதுடன், மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நியூசிலாந்து அணி

மறுபக்கம் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய நிலையில், சூப்பர் 8 சுற்றில் தடுமாற்றத்தை சந்தித்தது. இருப்பினும் அந்த அணி ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நியூசிலாந்து அணி அரையிறுதியில் சிறப்பாக செயல்படுவதுடன் இறுதிப் போட்டிக்கும் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

அதற்கேற்ற வகையில் அணியின் பேட்டிங்கில் ஃபின் ஆலன், டிம் செஃபெர்ட், கிளென் பிலீப்ஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும் டேரில் மிட்செல், மார்க் சாப்மேன் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன் ஆகியோருடன் மிட்செல் சான்ட்னர் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்
இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையிலும் 19 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் தென்னாப்பிரிக்க அணி 12 வெற்றிகளை பதிவு செய்து தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. மறுபக்கம் நியூசிலாந்து அணி 07 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றியை பதிவு செய்து ஆதிக்கத்தை செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம்

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக திகழ்கிறது. இங்கு இதுவரை 19 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 9 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணிகள் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் இந்த போட்டி இரவில் நடைபெறுவதன் காரணமாக, பனியின் தாக்கமும் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

நேரலை தகவல்கள்

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியும். இதில் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.

இதையும் படிங்க

உத்தேச லெவன்
தென்னாப்பிரிக்கா: ஐடன் மார்க்ராம்(கேப்டன்), குயின்டன் டி காக், ரியான் ரிக்கல்டன், டெவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.

நியூசிலாந்து: டிம் செஃபெர்ட், ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கோல் மெக்கோன்சி, மேட் ஹென்றி, இஷ் சோதி, லோக்கி ஃபெர்குசன்,