ETV Bharat / sports

3 அணிகள் பங்கேற்கும் பைபால் விளையாட்டு போட்டி... சென்னை ஐஐடியில் அறிமுகம்

கூடைப்பந்தைப் போன்றுதான் ஃபைபால் விளையாட்டு இருந்தாலும், மூன்று அணிகள் ஒரே நேரத்தில் விளையாடுவதால் கூடுதல் சுவாரஸ்யமும், அதிக உத்திகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகிறது என சென்னை ஐஐடி மாணவர் கூறியுள்ளார்.

பைபால் விளையாட்டு போட்டி
பைபால் விளையாட்டு போட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 28, 2026 at 10:59 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஃபைபால் (Phiball) எனப்படும் புத்தம் புதிய விளையாட்டை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு விளையாட்டில் இரு அணிகள் மட்டுமே போட்டியிடுவது வழக்கம். ஆனால் ஃபைபால் (Phi ball) விளையாட்டில் ஒரே நேரத்தில் 3 அணிகள் வட்ட வடிவ மைதானத்தில் விளையாடும். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் ஒரு கூடையைப் பாதுகாத்துக் கொள்ளும்.

அதே நேரத்தில் எதிரணியின் இரு கூடைகளில் பந்தை செலுத்த முற்பட வேண்டும். இவ்வாறு விளையாடும்போது வீரர்கள் ஒரே நேரத்தில் பல அணிகளைக் கணித்து உத்திகளை அதற்கேற்ப விரைந்து மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். இதுவே இந்த விளையாட்டின் முறையாகும். பைபால் விளையாட்டு சென்னை ஐஐடியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த போட்டியை சென்னை சென்னை ஐஐடி மாணவர் நலன்சார் டீன் சத்யநாராயணா என். கும்மாடி, தொடங்கி வைத்தார். கூடைப்பந்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய விளையாட்டில், வழக்கமான கூடைப்பந்தைப் போல 2 அணிகள் விளையாடாமல், ஒரே நேரத்தில் 3 அணிகள், 3 கூடைகளுடன் விளையாடுவது சிறப்பம்சமாகும்.

ஒரு அணியில் 7 வீரர்கள் பதிவு செய்யலாம். இதில் 4 வீரர்கள் களத்தில் விளையாடுவார்கள். போட்டி 3 குவாட்டர்களாக நடைபெறும். ஒவ்வொரு குவாட்டரும், 8 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு குவாட்டர் முடிந்ததும் அணிகள் தங்களது நிலைகளை மாற்றிக் கொள்ளும்.

ஒரு அணி தனது கூடையை பாதுகாக்கும் நிலையில், மற்ற இரு அணிகள் அந்தக் கூடையில் பந்தை செலுத்தி புள்ளிகளைப் பெற முயற்சிக்கும். 6.75 மீட்டர் வட்டத்திற்குள் அடிக்கும் கூடைக்கு 2 பாயின்ட், அதற்கு வெளியே அடிக்கும் கூடைக்கு 3 பாயின்ட் வழங்கப்படும்.

இந்த விளையாட்டில் வழக்கமான கூடைப்பந்தில் இருப்பது போன்ற கூடையின் பின்புறப் பலகை இருக்காது. நெட்பால் போன்ற கூடை அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வீரர்களின் துல்லியமான ஷூட்டிங் திறனை மேம்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் விளையாடலாம்

சென்னை ஐஐடி டீன் (மாணவர் நலன்) சத்தியநாராயணா கும்மாடி கூறுகையில், கூடைப்பந்து விளையாடுவதற்கான கட்டமைப்பு வசதிகள் பல கிராமப்புற மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இல்லாததை கருத்தில் கொண்டு, சாதாரண விளையாட்டு மைதானங்களிலேயே விளையாடும் வகையில் பைபால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மகளிர் டி20 ஆசிய கோப்பை 2026 இன்று தொடக்கம் | முழு போட்டி அட்டவணை மற்றும் நேரலை விவரங்கள் இதோ!

சுமார் ரூ.30 ஆயிரம் செலவில் மூன்று கோல் போஸ்ட்களை அமைத்து இந்த விளையாட்டை தொடங்க முடியும் . முதற்கட்டமாக 9 கல்லூரிகளை அழைத்து போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசு பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிற்சி போட்டிகள் நடத்தி விளையாட்டை பிரபலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று அணிகள் ஒரே நேரத்தில் விளையாடுவதால், வீரர்களின் வேகமான முடிவெடுத்தல், பாஸிங், ஷூட்டிங், குழு ஒருங்கிணைப்பு மற்றும் உத்தி வகுக்கும் திறன் மேம்படும் என தெரிவித்தார்.

ஐஐடி மெட்ராஸ் மாணவரும் விளையாட்டு வீரருமான வைபோவ் சுந்தரராஜன் கூறும்போது, "பைபால் கூடைப்பந்தைப் போன்றதுதான் என்றாலும், மூன்று அணிகள் ஒரே நேரத்தில் விளையாடுவதால் கூடுதல் சுவாரஸ்யமும், அதிக உத்திகளைப் பயன்படுத்த வேண்டிய சூழலும் உருவாகிறது" என தெரிவித்தார்.