ETV Bharat / sports

சாதனைகளின் 'கிங்' விராட் கோலி: உலகக் கிரிக்கெட் சரித்திரத்தை மாற்றி எழுதும் ரன் மெஷின்!

ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த உலக சாதனையாளரான விராட் கோலி, ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 86 சதங்களுடன் சச்சினுக்கு அடுத்தபடியாக உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

'கிங்' விராட் கோலி
'கிங்' விராட் கோலி (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : November 5, 2026 at 7:00 AM IST

4 Min Read
Choose ETV Bharat

உலகக் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பேட்டராகவும், கோடிக்கணக்கான ரசிகர்களின் உத்வேகமாகவும் திகழும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று (நவம்பர் 5) தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதிலும், தனது அசைக்க முடியாத பேட்டிங் ஃபார்ம் மற்றும் அசாத்திய உடற்தகுதி மூலம் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் அவர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியாவிற்கு வென்று தருவதையே தனது இறுதி இலக்காகக் கொண்டு அவர் தற்போது தீவிரமாகச் செயல்படு வருகிறார். கோலியின் கிரிக்கெட் பயணம் என்பது சாதனைகளால் மட்டுமே நிரப்பப்பட்ட ஒன்றாகும். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் (55) அடித்த ஒரே வீரர் என்ற உலக சாதனையை கோலி தன்வசம் வைத்துள்ளார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 86 சதங்களுடன், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக உலகளவில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

இதுநாள் வரையிலும் 317 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15,109 ரன்களை 58.79 என்ற அசுர சராசரியோடு குவித்துள்ள அவரது புள்ளிவிவரங்கள் உலகக் கிரிக்கெட்டில் அவரது அசைக்க முடியாத ஆதிக்கத்தைப் பறைசாற்றுகின்றன. வெறும் தனிநபர் சாதனைகள் மட்டுமின்றி, இந்திய அணி பல வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பைகளை வெல்வதற்கும் தூணாக விளங்கியுள்ளார். 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2024 டி20 உலகக்கோப்பைமற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இந்திய அணியின் மகுடங்களில் விராட் கோலியின் பங்களிப்பு அளப்பரியது.

சாதனைகளின் சக்கரவர்த்தி விராட் கோலி
சாதனைகளின் சக்கரவர்த்தி விராட் கோலி (IANS)

அதேபோல், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே ஆரம்பம் முதல் விளையாடி வரும் கோலி, கடந்த 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்று, தற்போதைய நடப்பு சாம்பியனாக வலம் வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் 9,000 ரன்களைக் கடந்த ஒரே வீரரும் இவரே ஆவார். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விராட் கோலி தீவிரமாக விளையாடி வருகிறார்.

இந்தத் தொடரில் நியூசிலாந்து மண்ணில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (652 ரன்கள்) முறியடிக்க கோலிக்கு இன்னும் 139 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. நடப்பு 2026ஆம் ஆண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 69 என்ற சராசரியுடன் விளையாடி வரும் விராட் கோலிக்கு, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் மழையாகப் பொழிந்து வருகின்றனர்.

ரன் மெஷின் விராட் கோலியின் சாதனைகள்

உலகக் கிரிக்கெட் அரங்கில் விராட் கோலி படைத்துள்ள சாதனைகள் சாதாரணமானவை அல்ல. தனது அசாத்திய திறமையாலும், ஓயாத உழைப்பாலும் அவர் கிரிக்கெட் புத்தகத்தின் வரலாற்றுப் பக்கங்களைத் தனதாக்கியுள்ளார். இன்று தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவரது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான சாதனைகளைக் கீழே காண்போம்.,

'ரன் மெஷின்' விராட் கோலி
'ரன் மெஷின்' விராட் கோலி (IANS)

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார். முன்னதாக 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை முறியடித்த விராட் கோலி முதலிடத்தில் கோலோச்சி உள்ளார்.

அதிவேகமாக 13,000 மற்றும் 15,000 ஒருநாள் ரன்கள்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்கள் மற்றும் 15,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற இமாலய மைல்கற்களையும் விராட் கோலி எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட ஜாம்பவான்களின் சாதனைகளைத் தகர்த்து இந்த இலக்குகளை அவர் எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் 86 சதங்கள்

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் 86 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக உலகளவில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

சதங்களின் நாயகன் கோலி
சதங்களின் நாயகன் கோலி (IANS)

டி20 உலகக் கோப்பைகளில் தொடர் நாயகன்

ஐசிசி டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டு முறை (2014 மற்றும் 2016) 'தொடர் நாயகன்' விருது வென்ற ஒரே கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டுமே. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் கடுமையான அழுத்தமான சூழ்நிலையிலும் அவரது ஆதிக்கம் எவ்வளவு சிறப்பானது என்பதற்கு இதுவே சான்று.

ஐசிசி கோப்பைகளின் நாயகன்

ஐசிசி நடத்தும் பெரும்பாலான தொடர்களில் கோப்பையை வென்ற வீரராக விராட் கோலி உள்ளார். அதன்படி, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை (2011), சாம்பியன்ஸ் டிராபி (2013, 2025) மற்றும் டி20 உலகக்கோப்பை (2024) என ஐசிசியின் அனைத்து முதன்மை வெள்ளை-பந்து தொடர்களிலும் விராட் கோலி கோப்பையை வென்றுள்ளார். இருப்பினும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) கோப்பையை மட்டும் அவர் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் இரட்டை சதங்கள்

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி 7 இரட்டைச் சதங்களை விளாசியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் கேப்டனாக அதிக இரட்டைச் சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் பெயரில் உள்ளது.

'சேஸ் மாஸ்டர்' விராட் கோலி
'சேஸ் மாஸ்டர்' விராட் கோலி (IANS)

ஐபிஎல் தொடரில் ஆதிக்கம்

ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசனில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலி, இதுவரை 283 போட்டிகளில் விளையாடி 9 சதங்கள், 68 அரைசதங்கள் உள்பட 9,336 ரன்களை விளாசியுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர் மட்டுமின்றி, அதிக சதங்களை விளாசிய வீரராகவும் தன் ஆதிக்கத்தைத் தொடர்கிறார்.

ஐபிஎல் சாம்பியன்

ஐபிஎல் தொடர் வரலாற்றில் பல வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு முறை கோப்பையை வெல்ல விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்தார்.

'கிங்' விராட் கோலி
'கிங்' விராட் கோலி (IANS)
இதையும் படிங்க

இவ்வாறு, கிரிக்கெட் அரங்கில் விராட் கோலி படைத்துள்ள சாதனைகள் ஏராளம். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எழுதிவரும் சாதனைப் புத்தகத்தின் பக்கங்கள் இன்னும் மீதமுள்ளன. இன்று தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சாதனைகளின் சக்கரவர்த்தி 'கிங்' விராட் கோலி, இன்னும் பல சாதனைகளைப் படைத்து கிரிக்கெட் வரலாற்றில் தன் சாம்ராஜ்யத்தை நீட்டிக்க வாழ்த்துகள்.