ETV Bharat / sports

ஊக்கமருந்து சர்ச்சை: தமிழக தடகள வீராங்கனைக்கு 8 ஆண்டுகள் தடை

இரண்டாவது முறையாக ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் தடைவிதிக்கப்படுவதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 6, 2026 at 10:19 AM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியடைந்த தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை தனலட்சுமி. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளைப் படைத்துள்ளார். மேலும் 2021 டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் 4x400 கலப்பு தொடர் போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு இறுதிக்கட்ட அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு தனலட்சுமி மீது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து அவர் ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனையின் முடிவில் அவர் ஊக்கமருந்து எடுத்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மூன்று ஆண்டு தடை விதிப்பதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA-National Anti-Doping Agency) அமைப்பு அறிவித்தது.

இதனால் தடகள போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்த தனலட்சுமி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற அவர், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் 11.36 வினாடிகளில் இலக்கை எட்டி சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றி அசத்தினார்.

மேலும் அந்த தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 200 மீட்டர் ஓட்டத்தை 23.53 வினாடியில்கடந்து தங்கப் பதக்கத்தை வென்ற தனலட்சுமி, 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்று அத்தொடரில் மொத்தமாக மூன்று தங்கப்பதக்கங்களை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலம் தமிழ்நாடு அணி அந்த தொடரில் மட்டும் 6 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம் மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தது.

அதேசமயம் அந்த தொடரின் முடிவிலும் தனலட்சுமி ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீண்டும் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், சோதனை முடிவில் அவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. மேலும் தனலட்சுமி இரண்டாவது முறையாக ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்படுவதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க

மேலும், அவரது தடை காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை கூறியுள்ளது. இதனால் தனலட்சுமியின் எதிர்காலம் தற்சமயம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஏனெனில் தற்போது 27 வயதை எட்டியுள்ள தனலட்சுமி, 8 ஆண்டு தடையை பெற்றுள்ளது அவரது விளையாட்டுத் துறையில் அவரின் எதிர்காலத்தை முற்றிலுமாக கேள்விக்குறியாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.