மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு; 2029 தேசிய விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு விருப்பம்
தமிழ்நாடு விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கான கோரிக்கை மனுவை மத்திய அமைச்சரிடம் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

Published : June 3, 2026 at 5:46 PM IST
புதுடெல்லி: 2029 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட வாய்ப்பளிக்க கோரிய முன்மொழிவினை, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழங்கினார்.
டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று (ஜூன் 3), மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் தமிழ்நாடு விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு இளைஞர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கான கோரிக்கை மனுவை வழங்கினார். அதில் குறிப்பாக, 2029ஆம் ஆண்டில் தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட வாய்ப்பளிக்க கோரிய முன்மொழிவினை மத்திய அமைச்சரிடம் ஆதவ் அர்ஜுனா அளித்தார்.
விளையாட்டு துறைக்கான பல்வேறு கோரிக்கைகள்
திருச்சி மாவட்டத்தில் 48 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள 'திருச்சி ஒலிம்பிக் அகாடமி' வளாகத்தில், தற்காப்புக் கலைகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம், நாகப்பட்டினத்தில் கடற்கரை விளையாட்டுகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம், கோவையில் சர்வதேச தரத்திலான UCI அங்கீகாரம் பெற்ற உள்ளரங்க மிதிவண்டி தடம் 'வெலோட்ரோம்' மற்றும் தேசிய மிதிவண்டி உயர்செயல்திறன் மையம் ஆகியவை அமைப்பது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சர்வதேச தரத்திலான 400 மீட்டர் செயற்கை ஓடுதளங்கள், கோயம்புத்தூர், செங்கல்பட்டு. திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த நீச்சல் வளாகங்கள், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, இராணிப்பேட்டை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பல்நோக்கு உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் அமைப்பது ஆகியவை குறித்த கோரிக்கைகளும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனுவில் இடம்பெற்றுள்ளன.
| இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் - வழக்கை திரும்ப பெற ஓபிஎஸ் முடிவு |
இவைமட்டுமின்றி, சென்னையில் சர்வதேச தரத்திலான 'ஏறு விளையாட்டு' பயிற்சி மையம் மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு மையம் ஆகியவை அமைக்கவும் முன்மொழியப்பட்டது.
மதுரையில் தேசிய விளையாட்டு மையம், விளையாட்டு மருத்துவம், காயம் மீட்பு மற்றும் செயல்திறன் மேம்பாட்டு மையத்தை அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 'கேலோ இந்தியா' மையங்கள் மற்றும் 'கேலோ இந்தியா' மாவட்ட மையங்களை விரிவாக்கம் செய்ய இந்த ஆலோசனையின்போது வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த கோரிக்கைகளை ஏற்ற மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளையாட்டை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளை பாராட்டி, தனது முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பையும் வழங்க உறுதியளித்தாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

