முத்தரப்பு டி20 தொடர் | டெவால்ட் பிரெவிஸ் போராட்டம் வீண்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நமீபியா வரலாற்று சாதனை!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை வழங்கி, அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த நமீபியாவின் ஜேஜே ஸ்மித் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


Published : August 29, 2026 at 9:35 AM IST
ஹைதராபாத்: முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் நமீபியா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வின்ட்ஹோக் நகரில் உள்ள நமீபியா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்துக் களமிறங்கிய நமீபியா அணிக்கு லாரன் ஸ்டீன்காம்ப் மற்றும் ஜான் ஃபிரைலின்க் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டிற்கு 9.4 ஓவர்களில் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லாரன் ஸ்டீன்காம்ப் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஜான் ஃபிரைலின்க் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
A Statement Fifty! 👏
— Proteas Men (@ProteasMenCSA) August 28, 2026
Dewald Brevis shows plenty of fight and composure as he brings up a crucial half century for #TheProteas! 🇿🇦✨
A brilliant knock from Brevis as South Africa continue to push towards the target. 💪#Unbreakable pic.twitter.com/m24RJz4E5O
பின்னர் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஜான் ஃபிரைலின்கும் விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் இறங்கிய வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கத் தவறியதன் காரணமாக, நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்க தரப்பில் பிரெனெலன் சுப்ராயன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 9 ரன்களுக்கும், ஜோர்டன் ஹெர்மன் 7 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களம் இறங்கிய நட்சத்திர வீரர் டெவால்ட் பிரெவிஸ் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் விக்கெட்டுகள் சரிந்தன.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெவால்ட் பிரெவிஸ் தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அதன்பின் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 75 ரன்களைச் சேர்த்த நிலையில் பிரெவிஸும் விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் இறங்கிய வீரர்களில் துவான் ஜான்சன் 25 ரன்களைச் சேர்த்ததைத் தவிர, மற்ற வீரர்கள் அடுத்தடுத்துச் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
🚨 MATCH RESULT 🚨
— Proteas Men (@ProteasMenCSA) August 28, 2026
Despite a fighting innings from Dewald Brevis, #TheProteas fall short in the chase as Namibia secure an 18 run victory. 🇿🇦
A valiant effort from #TheProteas in the opening match of the T20I Tri-Series, but Namibia hold on to take the win. 🏏#Unbreakable pic.twitter.com/J4jqOd6ju7
இதனால் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே எடுத்தது. நமீபியா அணி தரப்பில் ரூபன் ட்ரம்பெல்மேன் மற்றும் ஜேஜே ஸ்மித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் நமீபியா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்கவும் |
இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை வழங்கி, அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த நமீபியாவின் ஜேஜே ஸ்மித் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இத்தொடரில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

