இந்தியா vs ஜிம்பாப்வே: ஜொலிக்க காத்திருக்கும் சேப்பாக்கம் மைதானத்தின் மைந்தர்கள்
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதவுள்ளன போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால், இந்திய அணியில் இடம் பிடித்துள்ள மண்ணின் மைந்தர்கள் மீது பெரும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

Published : February 26, 2026 at 3:26 PM IST
சென்னை: இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 ஆட்டம் இன்று சென்னையிலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியைச் சந்தித்துள்ள இந்திய அணியானது, தங்களுடைய அடுத்தடுத்த போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இந்த போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. மறுபக்கம் ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் அழுத்தம் நிறைந்த இந்த போட்டியில் அந்த அணி வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதால், அது இந்தியாவிற்கு கூடுதல் சாதகத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முக்கிய காரணம், இது சில வீரர்களுக்கு சொந்த மைதானமாக இருப்பது தான். அவ்வாறு செப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் மைந்தர்கள் குறித்தும், அவர்களின் ஆதிக்கம் குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்.
வருண் சக்ரவர்த்தி
இந்திய அணியின் மிகச்சிறந்த ஸ்பின்னரும், உலக டி20 கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தவருமான வருண் சக்ரவர்த்தி. இவர் அஹ்மதாபாத்தில் நடைபெற்ற தெனனப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட தவறியதால், அவர் மீதான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இருப்பினும் இன்று சென்னையில் நடைபெறும் போட்டியில் வருண் சக்ரவர்த்தி மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் வருண் சக்ரவர்த்தி பெரும்பாலான போட்டிகளை விளையாடியது சென்னை மண்ணில் தான். மேலும் அவர் சென்னையில் உள்ள உள்ளூர் மைதானங்களில் தனது திறனை வளர்த்து, இறுதியில் சேப்பாக்கில் தனது ஆதிக்கத்திற்கான ஆற்றலை பெற்றவர். அதற்கு சிறந்த உதாரணம் 2018ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரை கூறலாம். ஏனெனில் அந்த சீசனில் அவர் 125 டாட் பந்துகளை வீசியதுடன், 4.7 என்ற எகானமி ரேட்டையும் கொண்டிருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. மேற்கொண்டு இந்த மைதானத்தில் அவர் வழக்கமாக 6.5 முதல் 7.5 வரை எகானமி ரேட்டை பராமரித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கேவுக்கு எதிராக இந்த மைதானத்தில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார். இதனால் அவர் இந்த போட்டியில் மிகப்பெரும் துருப்புச்சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷிவம் தூபே
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதன் மூலம் ஷிவம் தூபேவுக்கு, இது மற்றொரு சொந்த ஊராக மாறியுள்ளது. ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸின் சிக்ஸர் நாயகனாக விளங்கும் ஷிவம் தூபே, கடந்த சில சீசன்களாக இந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் எதிரணி பவுலர்களை பந்தாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் அவரது பந்துவீச்சும் இந்த மைதானத்தில் பெரிதளவில் எடுபடும் என்பது கூடுதல் சிறப்பாகும். இதுதவிர இந்த மைதானத்து அவர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகச்சிறந்த சராசரியையும் கொண்டுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் அடித்த ரன்களில் பெரும்பாலானவை இந்த மைதானத்தில் இருந்து வந்தது தான். அதனால் சொந்த மைதான ரசிகர்களுக்கு முன் அவர் மீண்டும் ஒரு நாயகனாக மாறும் வாய்ப்பை இன்று உருவாக்கலாம்.
வாஷிங்டன் சுந்தர்
வாஷிங்டன் சுந்தருக்கும் சென்னைக்கும் பிரிக்க முடியாத உறவு உள்ளது. ஏனெனில் அவர் தனது ஆரம்ப கால கிரிக்கெட்டை தொடங்கியது சென்னையில் தான். இதனால் இந்த மைதானத்தில் எந்த பந்துவீச்சு எடுபடும், எப்போது ஆட்டத்தை மாற்ற வேண்டும் என்ற யுக்திகளை அவர் நன்கறிந்தவர். இன்று அவரை பிளேயிங் லெவன் அணியில் சேர்த்தால், அது இந்திய அணிக்கு பெரும் சாதகமாக அமையலாம். குறிப்பாக பவர்பிளேவில் அவரது பந்துவீச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சஞ்சு சாம்சன்
சேப்பாக்கத்தின் புதிய வரவு சஞ்சு சாம்சன். எதிர்வரும் ஐபிஎல் தொடர் முதல் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதனால் சென்னை மண்ணின் புதிய மைந்தராக சஞ்சு சாம்சன் அறியப்படுகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் பல சீசன்களாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனுக்கு சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் ஒன்றும் புதியது அல்ல. தற்போது அவர் சிஎஸ்கேவின் அங்கமாக இருப்பதால், அவருக்கென தனி ரசிகர் படையும் சென்னையில் உருவாக தொடங்கிவிட்டது.
இந்த உலகக் கோப்பை தொடரில் பெருமளவில் வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சனுக்கும், சென்னை மைதானம் ஒரு மறுவாழ்வை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தால், ஸ்பின்னர்களுக்கு எதிரான அவரது ஆதிக்கத்தை செலுத்த இது ஒரு சிறந்த இடமாகவும் அமையும். இதனால் இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ரசிகர் கூட்டம்
சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தரும் ரசிகர்கள் மற்ற மைதான ரசிகர்களை போல் இல்லாமல் தனித்துவமானவர்களாக பார்க்கப்படுகின்றனர். ஏனெனில் வரலாற்று ரீதியாகவே அவர்கள் சொந்த அணியை காட்டிலும், நல்ல கிரிக்கெட்டை அங்கீகரிப்பவர்களாக இருந்துள்ளனர். ஏனவே இந்த ரசிகர்களுக்கு உலக அளவில் தனி மரியாதையை உண்டு. இதுபோன்ற சூழலில் தான், இந்திய அணி அழுத்தங்கள் நிறைந்த இந்தப் போட்டியை சொந்த ரசிகர்கள் முன்னிலையில் எதிர்கொள்கிறது.
இது மண்ணின் மைந்தர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு கூடுதல் சாதகமாக அமையும். அதேசமயம், ஷிவம் தூபே, சஞ்சு சாம்சனுக்கும் இங்கு தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எனவே, இன்றைய போட்டியின் போது மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவும், கரகோசமும் அதிகமாகவே இருக்கும். இதனை இந்திய அணி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் இந்த உலகக் கோப்பைத் தொடருக்காகப் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும், அது பேட்டர்களுக்கு எதிர்பார்த்த அளவு சாதகத்தை வழங்கவில்லை. வழக்கமாகச் சுழற்பந்து வீச்சுக்குச் சொர்க்கமாக திகழும் இந்த மைதானத்தில், தற்போது வேகம் மற்றும் பவுன்ஸ் ஓரளவிற்கு அதிகரித்தித்துள்ளது. இருப்பினும் நேரம் செல்ல செல்ல பிட்ச் மெதுவாகும் என்று கணிக்கப்படுகிறது. .
இதையும் படிங்க |
அதனால் பேட்டர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முயற்சிக்காமல், சூழ்நிலையை புரிந்து அதற்கேற்றார் போல் நிதானமாக விளையாடுவது அவசியமாகும். இன்று நடைபெறும் ஜிம்பாப்வேக்கு எதிரான வாழ்வா-சாவா ஆட்டத்தில், இந்திய பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடினால் மட்டுமே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய முடியும்.

