டி20 உலகக் கோப்பை 2026: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுமா நியூசிலாந்து?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி 16 வெற்றிகளையும், நியூசிலாந்து அணி 10 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன.


Published : February 27, 2026 at 11:49 AM IST
கொழும்பு: டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் ஏற்கெனவே குரூப் 2ல் இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், நியூசிலாந்தும் ஏறத்தாழ அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மறுபக்கம் குரூப் 1ல் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நியூசிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை பெறும் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Can New Zealand join England in the semi-finals of the #T20WorldCup? 👀
— ICC (@ICC) February 27, 2026
How to watch 👉 https://t.co/NPykWM7qqY pic.twitter.com/VW4dYeeqr0
இங்கிலாந்து அணி
ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அசத்தியதை தொடர்ந்து, சூப்பர் 8 சுற்றிலும் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து 6ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணியின் கேப்டன் ஹாரி புரூக் சதமடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது அணிக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
அதேசமயம் மற்ற பேட்டர்களான பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெல், டாம் பாண்டன் உள்ளிட்டோர் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆதில் ரஷித் ஆகியோர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். அவர்களுடன் மற்ற பவுலர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அது அணியின் வெற்றிக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.
நியூசிலாந்து அணி
மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சூப்பர் 8 சுற்றில் சிறப்பாக விளையாடியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால், நேரடியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும் என்பதால் அணி வீரர்கள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Who will join South Africa and England in the #T20WorldCup semi-finals? 🔥
— ICC (@ICC) February 27, 2026
More 👉 https://t.co/DAEHvrePfd pic.twitter.com/qA0Zi1YoN9
அணியின் பேட்டிங்கில் ஃபின் ஆலன், டிம் செஃபெர்ட், கிளென் பிலீப்ஸ், டேரில் மிட்செல் ஆகியோருடன் மிட்செல் சான்ட்னர் மற்றும் கோல் மெக்கன்ஸியும் சிறப்பாக செயல்படுவது அணிக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதேசமயம் அணியின் பவுலிங்கில் மிட்செல் சான்ட்னர், மேட் ஹென்றி, லோக்கி ஃபெர்குசன், ஜேக்கப் டஃபி உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையிலும் 27 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் இங்கிலாந்து அணி 16 வெற்றிகளை பதிவு செய்து தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. மறுபக்கம் நியூசிலாந்து அணி 10 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று ஆதிக்கத்தை தொடருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆர்.பிரேமதாசா மைதானம்
கொழும்பில் உள்ள பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 64 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 27 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 36 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேரலை தகவல்கள்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியும். இதில் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.
இதையும் படிங்க |
உத்தேச லெவன்
இங்கிலாந்து: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தெல், ஹாரி புரூக் (கேப்டன்), டாம் பான்டன், சாம் கரண், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், லியாம் டௌசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத்,
நியூசிலாந்து: டிம் செஃபெர்ட், ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கோல் மெக்கோன்சி, மேட் ஹென்றி, இஷ் சோதி, லோக்கி ஃபெர்குசன்,

