ETV Bharat / sports

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்: அரையிறுதிக்கான இறுதி முயற்சியில் வெல்வது யார்?

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி வாய்ப்பை பெறுவது யார்? என்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

சூர்யகுமார் யாதவ் - ஷாய் ஹோப்
சூர்யகுமார் யாதவ் - ஷாய் ஹோப் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 28, 2026 at 6:02 PM IST

3 Min Read
Choose ETV Bharat

கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் நடப்பு சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் மீதமுள்ள இடங்களுக்கான போட்டி அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக தொடரை நடத்தும் இந்திய அணி தங்களுடைய வாழ்வா சாவா ஆட்டத்தில் நாளைய தினம் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அரையிறுதிக்கு முன்னதாக இவ்விரு அணிகளுக்கும் இதுவொரு காலிறுதி போட்டியை போல் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் கொல்கத்தா சென்று தங்களுடையை பயிற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முன்னதாக சென்னையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 72 ரன்கள் வித்தியாசத்தில் வலுவான வெற்றியைப் பெற்ற கையோடு இந்திய அணி இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவிடம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய கையோடு போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் இரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் ஆதிக்கத்தை செலுத்தி வருவதால், இந்த போட்டியில் நிச்சயம் அதிரடிக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பரிச்சயமானவர்களும் அறிமுகமில்லாதவர்களும்

இந்த உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே கொல்கத்தாவில் சில போட்டிகளை விளையாடியுள்ளது. அதனால் நிச்சயம் மைதானத்தின் தன்மை குறித்து அணிக்கு ஒரு தெளிவு இருக்கும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த உலகக் கோப்பையில் கொல்கத்தாவில் இது அவர்களின் முதல் போட்டியாகும். இருப்பினும், சொந்த மண் மற்றும் ரசிகர்கள் காரணமாக இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைதானத்தின் தன்மை

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்துள்ளது. ஏனெனில் இந்த தொடரில் முதல் 200+ ரன்கள் வந்தது இந்த மைதானத்தில் தான். அதனால் இந்த போட்டியிலும் நிச்சயம் வாண வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்களுக்கு இது தங்களின் அதிரடியை காட்டும் மைதானமாகவும் அமையலாம்.

அதேசமயம் பவுலிங்கை பொறுத்தவரையிலும் இங்கு கூடுதல் பவுன்ஸ் கிடைக்கும் என்பதால், புதிய பந்தில் பும்ரா மற்றும் ஆர்ச்சர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும். பெரும்பாலும் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்தாலும், மிடில் ஓவர்களை பொறுத்தவரையில் ஸ்பின்னர்கள் திருப்புமுனையை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கும். அதேசமயம் பனியின் தாக்கமும் இருக்கும் என்பதால் அது பவுலர்களுக்கு சற்று தலைவலியை ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் பலமும் கவலையும்

ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி தங்களுடைய வெற்றிக்கான பாதையை மீண்டும் கண்டுபிடித்துள்ளது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஹெட்மையர் மற்றும் ஷெப்ஃபர்ட் போன்ற ஹிட்டர்களுக்கு எதிராக மிடில் ஓவர்களில் இந்திய அணி எவ்வாறு சமாளிக்கும் என்ற கவலைகளும் அதிகரித்துள்ளன. ஏனெனில் பவர்பிளேவுக்குப் பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் பந்துவீசுவார்கள் என்பதால் அது பேட்டர்களுக்கு சற்று கூடுதல் சாதகத்தையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸின் அணுகுமுறை

இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்கம் முதலே தங்களுடைய அணுகுமுறையில் எந்த மற்றத்தையும் செய்ய வில்லை. அந்த அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாச வேண்டும் என்ற நோக்கத்துடனே பேட்டிங் செய்து வருகிறது. அதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும். அதே வேளையில், இந்திய அணியும் ரன்களை கட்டுப்படுத்த நிச்சயம் போராடும்.

ரன் ரேட்

ஒருவேளை இந்த போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டால், வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். அதேவேளையில் இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறும். ஏனெனில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் ரேட் +1.791ஆக உள்ளது. அதேசமயம் இந்திய அணியின் ரன்ரேட் -0.100ஆக உள்ளது. அதனால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது மிகவும் அவசியமாகும்.

இதையும் படிங்க

நேருக்கு நேர்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தலா 4 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அது அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. அதனால் இந்த முறையும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஈடன் கார்டன்ஸில் ஆதிக்கத்தை தொடரும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த 2016ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தான் தங்களுடைய இரண்டாவது டி20 உலகக் கோப்பையை வென்றது என்பதையும் மறந்தவிட கூடாது.

இந்தியாவின் உத்தேச அணி: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.