ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2026: பேட்டிங்கில் அதிரடி காட்டிய இந்தியா; ஜிம்பாப்வேவுக்கு 257 டார்கெட்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன்
அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 26, 2026 at 8:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

சென்னை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 257 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னையிலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷனும் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதற்கியில் அபிஷேக் சர்மா 26 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார்.

அதன்பின் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 55 ரன்களை சேர்த்த கையோடு அபிஷேக் சர்மாவும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தி உயர்த்தினர். இதில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 33 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். மேற்கொண்டு இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 50 ரன்களையும், திலக் வர்மா 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 44 ரன்களையும் சேர்த்தனர்.

இதன் மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 256 ரன்களை குவித்தது. இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி 254 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், இந்திய அணி அதனை முறியடித்துள்ளது.

இதையும் படிங்க

பிளேயிங் லெவன்

இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், தடிவானாஷே மருமணி , தியான் மேயர்ஸ், ரியான் பார்ல், சிக்கந்தர் ரஸா (கேப்டன்), டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிராட் எவன்ஸ், , ரிச்சர்ட் ங்காரவா, டினோடென்டா மபோசா, பிளெஸிங் முசரபானி