டி20 உலகக் கோப்பை 2026: பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்யுமா இங்கிலாந்து?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் 31 முறை மோதிய நிலையில், இங்கிலாந்து அணி 21 போட்டிகளிலும், பாகிஸ்தான் 9 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன.


Published : February 23, 2026 at 8:02 PM IST
பல்லகலே: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்சமயம் சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 5ஆவது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே முதல் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற கையோடும், மறுபக்கம் பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் முயற்சியுடனும் இந்த போட்டியை எதிர்கொள்கின்றன.
It's game on! 💪 Eight teams chasing one trophy at the 2026 #T20WorldCup 🏆
— ICC (@ICC) February 21, 2026
Don't miss it. Broadcast details here 👉 https://t.co/NPykWM7qqY pic.twitter.com/lbg18Y2fSg
இங்கிலாந்து அணி
ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அபாரமான வெற்றியை பதிவு செய்து அசத்திய கையோடு, இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
அணியின் பேட்டிங்கில் பில் சால்ட், வில் ஜேக்ஸ் அதிரடியாக விளையாடி வரும் நிலையில், மற்ற வீரர்களும் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், வில் ஜேக்ஸ் ஆகியோருடன் சாம் கரணும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணி
மறுபக்கம் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியைத் தழுவியதை தவிர்த்து மற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்துடனான போட்டியானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் அந்த அணி எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் சாஹிப்சாதா ஃபர்ஹானும், பவுலிங்கில் உஸ்மான் தாரிக், சல்மான் மிர்ஸா ஆகியோர் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 09 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது.
Super 8-ல் ஒரு super-ஆன போட்டி காத்திருக்கு!🔥
— Star Sports Tamil (@StarSportsTamil) February 23, 2026
📺 காணுங்கள் | ICC Men’s #T20WorldCup | Super 8 | #ENGvPAK | நாளை, 6 PM | JioHotstar & Star Sports 1 தமிழில்
#StarSportsTamil pic.twitter.com/Cx73u4JNQe
பல்லகலே கிரிக்கெட் மைதானம்
பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 34 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 17 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 14 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றியை பதிவு செய்துள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேரலை தகவல்கள்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியும். இதில் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.
இதையும் படிங்க |
உத்தேச லெவன்
இங்கிலாந்து: பிலிப் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், டாம் பான்டன், ஹாரி புரூக்(கேப்டன்), சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் டாசன், அடில் ரஷீத்.
பாகிஸ்தான்: சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் ஆசாம், உஸ்மான் கான், கவாஜா நஃபே, ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், சல்மான் மிர்சா, உஸ்மான் தாரிக்.

