ETV Bharat / sports

சிட்னி டெஸ்ட்: சதம் விளாசி புதிய சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்

ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் அதிக சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

சதம் விளாசி சாதனைகளை குவித்த ஸ்டீவ் ஸ்மித்
சதம் விளாசி சாதனைகளை குவித்த ஸ்டீவ் ஸ்மித் (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : January 6, 2026 at 5:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 384 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஜோ ரூட் 160 ரன்களை அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மைக்கேல் நேசர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 517 ரன்களைச் சேர்த்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் 129 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். அதன்படி, இது அவருடைய 37ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாக அமைந்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

முன்னதாக இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 36 சதங்களை விளாசி 6ஆம் இடத்தைப் பிடித்திருந்த நிலையில், தற்சமயம் ஸ்டீவ் ஸ்மித் அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 45 சதங்களுடன் இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 41 சதங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

அதிக டெஸ்ட் சதங்கள்

  • 51 - சச்சின் டெண்டுல்கர்
  • 45 - ஜாக் காலிஸ்
  • 41 - ஜோ ரூட்
  • 41 - ரிக்கி பாண்டிங்
  • 38 - குமார் சங்கக்கார
  • 37 - ஸ்டீவன் ஸ்மித்*
  • 36 - ராகுல் டிராவிட்

இது தவிர்த்து ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் அதிக சதங்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். இதற்கு முன் ஜேக் ஹாப்ஸ் 12 சதங்களை விளாசி இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஸ்டீவ் ஸ்மித் 13 சதங்களை விளாசி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் 19 சதங்களை விளாசி முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஆஷஸ் தொடரில் அதிக சதங்கள்

  • 19 - டான் பிராட்மேன்
  • 13 - ஸ்டீவன் ஸ்மித்*
  • 12 - ஜாக் ஹாப்ஸ்
  • 10 - ஸ்டீவ் வாக்
  • 9 - வாலி ஹம்மண்ட்

மேலும் இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தனது சதத்தைப் பதிவு செய்ததன் மூலம், ஆஷஸ் டெஸ்ட் தொடர் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். முன்னதாக ஜேக் ஹாப்ஸ் 71 இன்னிங்ஸ்களில் 3,636 ரன்களை எடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஸ்டீவ் ஸ்மித் 73 இன்னிங்ஸ்களில் 3,682 ரன்களைச் சேர்த்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள்

  • டான் பிராட்மேன் - 5,028
  • ஸ்டீவன் ஸ்மித்* - 3,682
  • ஜாக் ஹாப்ஸ் - 3,636
  • ஆலன் பார்டர் - 3,222
  • ஸ்டீவ் வாக் - 3,173

இதையும் படிங்க

ஆஸ்திரேலிய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் அறிமுகமானார். தொடக்க காலங்களில் பவுலராக அணியில் இடம்பிடித்து வந்த அவர், அதன்பின் அந்த அணியின் தவிர்க்க முடியா பேட்டராக உருவாகியுள்ளார். இதுவரை ஸ்மித் 122 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் 37 சதங்கள், 44 அரைசதங்கள் என 10,613 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.