ETV Bharat / sports

மீண்டும் முதலிடம் பிடித்த ஸ்மிருதி மந்தனா: எக்லெஸ்டோனின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அலானா கிங்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டை முந்தி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா
ஸ்மிருதி மந்தனா (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 3, 2026 at 5:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டித் தரவரிசையில், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா பேட்டர்கள் தர வரிசையிலும், ஆஸ்திரேலியாவின் அலானா கிங் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் நடைபெற்ற முடிந்த டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணியும் கைப்பற்றி அசத்தியது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி மார்ச் 6 ஆம் தேதி பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான வீராங்கனைகள் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

முதலிடத்தை பிடித்த மந்தனா

இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டை பின்னுக்கு தள்ளி இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஸ்மிருதி மந்தனா மொத்தமாக 89 ரன்களை எடுத்ததன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.

அதே சமயம் தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் ஒரு இடம் பின் தங்கி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதுதவிர்த்து ஆஸ்திரேலியாவின் பெத் மூனி மற்றும் அலிசா ஹீலி ஆகியோரும் தலா 2 இடங்கள் முன்னேறியுள்ள நிலையில், மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

எக்லெஸ்டோனை பின் தள்ளிய கிங்

மறுபக்கம் மகளிர் ஒருநாள் பவுலர்களுக்கான தரவரிசையில் கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்தை தக்கவைத்திருந்த இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோனை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய வீராங்கனை அலானா கிங் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய தொடரின் மொத்தமாக அலானா கிங் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

அதே சமயம் சோஃபி எக்லெஸ்டோன் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். மேற்கொண்டு தென்னாப்பிரிக்காவின் மரிஸான் கேப் 4ஆம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் 5ஆம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆல் ரவுண்டர்கள் தரவரிசை

இது தவிர மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் ஹீலி இரண்டாம் இடத்திற்கும், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் மூன்றாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

இதையும் படிங்க

மறுபக்கம் தென்னாப்பிரிக்காவின் மரிஸான் கேப் மற்றும் இந்திய அணியின் தீப்தி சர்மா ஆகியோர் பின்னடைவை சந்தித்து 4 மற்றும் 5ஆம் இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து பேட்டர்கள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனாவும், பவுலர்கள் தரவரிசையில் அலானா கிங்கும் முதலிடத்தை பிடித்ததை அடுத்து அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.