ETV Bharat / sports

அபிஷேக் சர்மாவுடன் பேட்டிங் செய்வதை எப்போதும் விரும்புவேன்: சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

அபிஷேக் சர்மாவுடன் இணைந்து பேட்டிங் செய்வதை நான் எப்போதும் விரும்புவேன் என இந்திய வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன்
அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 27, 2026 at 2:13 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் நேற்று சென்னையிலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபிஷேக் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான அரைசதங்கள் மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 256 ரன்களை குவித்தது.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் பிரையன் பென்னட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கிய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

முன்னதாக இப்போட்டிக்கான இந்திய அணியின் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. ஏனெனில் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சரிவர விளையாடாமல் தடுமாறி வந்தனர். அதிலும் குறிப்பாக இரு தொடக்க வீரர்களும் இடதுகை பேட்டர்கள் என்பதால், எதிரணி வீரர்களுக்கு அது கூடுதல் சாதகமாக அமைந்ததுடன், முதல் ஓவரிலேயே அவர்களின் விக்கெட்டுகளையும் கைப்பற்றி வந்தனர்.

இந்த நிலையில் தான் இந்திய அணி டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையை மாற்றும் வகையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங்கிற்கு பதிலாக சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்த்தது. பின்னர் தொடக்க வீரராக இன்னிங்ஸை தொடங்கிய சஞ்சு அதிரடியாக விளையாடி 2 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி என 26 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அவர் கொடுத்த அதிரடியான தொடக்கம் மற்ற வீரர்களுக்கு ரன்களை சேர்க்க வழி வகுத்தது.

இந்நிலையில் போட்டி முடிந்து ஐசிசியின் காணொளியில் பேசிய சஞ்சு சாம்சன், "அபிஷேக் சர்மாவுடன் இணைந்து பேட்டிங் செய்வதை நான் எப்போதும் விரும்புவேன். நாங்கள் எப்போதும் களத்தில் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இன்று அவர் என்னிடம் விக்கெட் எப்படி உள்ளது, நான் எப்படி விளையாட வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்.

ஆனால் நான் அவரிடம், பந்து அதிகம் திரும்பவில்லை. அதனால் பந்தை பார்த்து உன்னுடைய ஷாட்டை விளையாடு என்று கூறினேன். இவ்வாறு நாங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதால், அவருடன் பேட்டிங் செய்வதை மிகவும் ரசிக்கிறேன். இன்று நாங்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டதுடன், இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கத்தை வழங்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

இந்திய அணிக்காக 59 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 3 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் என மொத்தமாக 1,124 ரன்களை எடுத்துள்ளார். தற்போது ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ள சஞ்சு சாம்சன், எஞ்சியுள்ள போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்புக் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.