ETV Bharat / sports

ஐஎல்டி20 2026: எமிரேட்ஸை வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது டெஸர்ட் வைபர்ஸ்

ஐஎல்டி20 லீக் தொடரில் சாம் கரண் தலைமையிலான டெஸர்ட் வைபர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

டெஸர்ட் வைபர்ஸ்
டெஸர்ட் வைபர்ஸ் (X @ TheDesertVipers)
author img

By ETV Bharat Sports Team

Published : January 5, 2026 at 10:54 AM IST

2 Min Read
Choose ETV Bharat

துபாய்: எம்.ஐ.எமிரேட்ஸ் அணிக்கு எதிரான ஐஎல்டி20 இறுதிப் போட்டியில் டெஸர்ட் வைபர்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த 4ஆவது சீசன் ஐஎல்டி20 தொடரானது கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாம் கரண் தலைமையிலான டெஸர்ட் வைபர்ஸ் அணியை எதிர்த்து கீரன் பொல்லார்ட் தலைமையிலான எம்.ஐ. எமிரேட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய வைபர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஃபகர் ஜமான் 20 ரன்களிலும், ஜேசன் ராய் 11 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஹோல்டன் மற்றும் கேப்டன் சாம் கரண் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் இருவரும் இணைந்து 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஹோல்டன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேன் லாரன்ஸ் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தனது அரைசதத்தைப் பதிவு செய்திருந்த சாம் கரண் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன் மூலம் டெஸர்ட் வைபர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை சேர்த்தது. எமிரேட்ஸ் அணி தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய எம்.ஐ.எமிரேட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஆண்ட்ரே ஃபிளெட்சர் 10 ரன்களுக்கும், டாம் பாண்டன் 7 ரன்களிலும், முகமது வசீம் 26 ரன்களிலும், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 54 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷாகிப் அல் ஹசன் மற்றும் கேப்டன் கீரன் பொல்லார்ட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். இதில் இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், ஷாகிப் அல் ஹசன் 36 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து கீரன் பொல்லார்ட் 28 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க தவறினர்.

இதன் காரணமாக எம்.ஐ.எமிரேட்ஸ் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களில் ஆல் அவுட்டானது, டெஸர்ட் வைபர்ஸ் அணி தரப்பில் டேவிட் பெய்ன் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் டெஸர்ட் வைபர்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் எம்.ஐ.எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

இதையும் படிங்க

இந்த வெற்றியின் மூலம் ஐஎல்டி20 தொடர் வரலாற்றில் டெஸர்ட் வைபர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன் அந்த அணி 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையிலும் கோப்பையை தவறவிட்ட நிலையில், தற்சமயம் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.