ETV Bharat / sports

இரட்டை சதத்தை தவறவிட்ட மேத்யூ ரென்ஷா: முதல் இன்னிங்ஸில் தடுமாறும் தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ரென்ஷா 21 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 190 ரன்களில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலிய அணி (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : October 10, 2026 at 8:43 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 390 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், மேத்யூ ரென்ஷாவின் அபார ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து, இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை மேத்யூ ரென்ஷா மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் தொடர்ந்தனர். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாட் கம்மின்ஸ் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க்கும் 7 ரன்களில் நடையைக் கட்டினார்.

எனினும், மறுமுனையில் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ ரென்ஷா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய அவர், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினார். வால்டெண்டர் வீரர்களுடன் இணைந்து அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார்.

ஒரு கட்டத்தில் மேத்யூ ரென்ஷா இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 21 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 190 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 390 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்பின் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரியான் ரிக்கெல்டன் ரன்கள் ஏதுமின்றி ஜோஷ் ஹெசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் மார்க்ரமுடன் இணைந்த டேவிட் பெடிங்ஹாம் நிதானமாக விளையாடி மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக்கொண்டார்.

இதையும் படிங்க

அதன் பிறகு போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களைச் சேர்த்துள்ளது. தற்போது ஐடன் மார்க்ரம் 15 ரன்களுடனும், டேவிட் பெடிங்ஹாம் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியை விட 363 ரன்கள் பின் தங்கிய நிலையில், தென்னாப்பிரிக்க அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.