மகளிர் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ்! ஆட்ட நாயகியான நடின் கிளார்க்
பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் எதிரணியை அதிர வைத்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நடின் கிளார்க் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Published : January 10, 2026 at 8:35 AM IST
மும்பை: மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
மகளிர் பிரிமீயர் லீக் தொடரின் 4வது சீசன் நேற்று (ஜன.9) தொடங்கியது. நவி மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பேட்டிங்கை தேர்வு செய்யாமல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. முதலில் அதிரடி காட்டிய மும்பை இந்திய அணி வீராங்கனைகள், பிறகு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக, சஞ்சீவன் சஞ்சனா25 பந்துகளில் 45 ரன்களை எடுத்தார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடக்கம். அவரை தொடர்ந்து, நிக்கோலா கேரி 40 ரன்களும், கமலினி 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் வீராங்கனை நடின் டி கிளார்க் 4 விக்கெட்டுகளை அதிரடியாக கைப்பற்றி, ஆட்டத்தின் போக்கை மாற்றினார். தொடர்ந்து, லாரன் பெல், ஷ்ரேயங்கா பாட்டில் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
இதன் தொடர்ச்சியாக, 155 ரன்களை வெற்றி இலக்ககாக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் க்ரேஸ் ஹாரிஸ் - கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்தனர்.
ஸ்மிருதி மந்தனா 18 ரன்களும், க்ரேஸ் ஹாரிஸ் 18 ரன்களும், ரிச்சா கோஷ் 6 ரன்களும், ராதா யாதவ் ஒரு ரன்னும் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய நடின் கிளார்க் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அடுத்தடுத்து சிக்சர்களும், பவுண்டரியுமாக வாணவேடிக்கை காட்டிய நடின் கிளார்க், அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில், 20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 7 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 63 ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நடின் டி கிளார்க் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

