ETV Bharat / sports

'என் வழி தனி வழி' - நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர் ஆதித்யா அசோக்

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து ஒருநாள் அணியில் இடம் பிடித்திருக்கும் ஆதித்யா அசோக், தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதித்யா அசோக்
ஆதித்யா அசோக் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 9, 2026 at 2:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு எதிராக பந்துவீச ஆவலுடன் காத்திருப்பதாக நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள ஆதித்யா அசோக் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதிலும் குறிப்பாக ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், நியூசிலாந்து அணி இந்த டி20 தொடரை எதிர் கொள்ள இருக்கிறது. அந்த வகையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 21 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் இரு நாட்டு அணிகளும் அறிவிக்கப்பட்டு, போட்டிகளுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நியூசிலாந்து ஒருநாள் அணியில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஆதித்யா அசோக் என்ற இளம் வீரருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பிறந்த ஆதித்யா அசோக் தனது 4 வது வயதில் பெற்றோருடன் நியூசிலாந்தின் ஆக்லாந்திற்கு குடிபெயர்ந்தார். பின்னர் நியூசிலாந்தின் உள்ளூர் போட்டிகளின் விளையாடி சிறப்பாக செயல்பட்டதால் கவனம் ஈர்த்த ஆதித்யா, கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். இதுவரை 2 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ள ஆதித்யா, அதில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.

இருப்பினும் முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளதாலும், டி20 உலகக் கோப்பை தொடருக்காக தயாராவதற்கு ஓய்வில் இருப்பதாலும் இந்திய ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியில் ஆதித்யாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு எதிராக பந்துவீச ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஆதித்யா அசோக், "இந்த தொடரின் மூலம் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது மிகவும் உற்சாகமாகவும், சவால் நிறைந்ததாகவும் உள்ளது. ஏனெனில் இந்த விளையாட்டில் சிறந்தவர்களாக இருக்கும் நபர்களுக்கு எதிராக உங்களை நீங்களே சோதித்துக் கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பாக பார்க்கிறேன். ஏனெனில் அவர் செய்துள்ள சாதனைகள் மிகவும் அசாதாரணமானவை" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அசோக், "அதனால் அவர்களுக்கு எதிராக விளையாடுவதும், இங்கு வந்து கற்றுக்கொள்வதும் எனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது. ரோஹித், கோலி மற்றும் இந்திய அணியில் உள்ள மற்ற அனைவருக்கும் எதிராக விளையாடவும் நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். அவர்கள் அனைவரும் நிச்சயமாகச் சிறந்த வீரர்கள் என்பது சந்தேகமில்லை" என்று கூறியுள்ளார்.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஆதித்யா அசோக், திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் தீவிரமான ரசிகர்கரும் ஆவார். மேலும் அவர் தனது கையில் படையப்பா படத்தில் ரஜினி காந்த் பேசும் 'என் வழி தனி வழி' என்ற வசனத்தையும் பச்சைக் குத்தியுள்ளார். இதனை அவர் ரஜினி காந்த் மற்றும் அவரது தாத்தாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த வசனத்தை பச்சை குத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

நியூசிலாந்து ஒருநாள் அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதித்யா அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவான் கான்வே, ஜக்காரி ஃபால்க்ஸ், மிட்செல் ஹேய், கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.