ETV Bharat / sports

எஸ்ஏ20 லீக் 2026: பரபரப்பான ஆட்டத்தில் கேப்டவுனை வீழ்த்தி ராயால்ஸ் த்ரில் வெற்றி

பார்ல் ராயல்ஸுக்கு எதிரான தோல்வியின் மூலம் நடப்பு சாம்பியன் எம்.ஐ.கேப்டவுன் அணி இந்த சீசனில் தங்களின் மூன்றாவது தோல்வியைத் தழுவியுள்ளது.

பார்ல் ராயல்ஸ்
பார்ல் ராயல்ஸ் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 3, 2026 at 10:30 AM IST

2 Min Read
Choose ETV Bharat

பார்ல்: எம்.ஐ.கேப்டவுன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

எஸ்.ஏ.20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் எம்.ஐ.கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்ல்லில் உள்ள போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்து கேப்டவுன் அணியை பந்துவீச அழைத்தது.

அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் அசா டிரைப் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் தங்களின் அரை சதங்களைப் பதிவு செய்ததுடன், முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 51 ரன்களை எடுத்த நிலையில் டிரைப் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் டேவிட் மில்லர் 19 ரன்களுக்கும், சிக்கந்தர் ரஸா 2 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். அதே சமயம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 98 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்.

இதன் மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 181 ரன்களைச் சேர்த்தது. கேப்டவுன் அணி தரப்பில் கேப்டன் ரஷித் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கேப்டன் அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - ரஸி வேண்டர் டுசென் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ரியான் ரிக்கெல்டன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வேண்டர் டுசென் தனது அரைசதத்தைப் பதிவு செய்திருந்த நிலையில், 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 59 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

மேற்கொண்டு களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், ஜேசன் ஸ்மித், ஜேக்கஸ், டாம் மூர்ஸ் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் ஜார்ஜ் லிண்டே மற்றும் ரஷித் கான் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை கரை சேர்த்த முயற்சித்தனர். இதனால் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரி 15 ரன்களை தேவை என்ற நிலை ஏற்பட்டது.

ராயல்ஸ் தரப்பில் பார்ட்மேன் கடைசி ஓவரை வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ரஷித் கான் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரபாடாவும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த நிலையில், இரண்டாவது பந்தில் விக்கெட்டை இழந்தார். இதனால் கேப்டவுன் அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இன்னிங்ஸின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஜார்ஜ் லிண்டே பேக்வேர்ட் பாய்ண்ட் திசையில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த நிலையில், அந்த பந்து பவுண்டரி மட்டுமே சென்றது. இதனால் எம் ஐ கேப்டவுன் அணியால் 20 ஓவர்கள் மிடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. ராயல்ஸ் தரப்பில் பார்ட்மேன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையும் படிங்க

இதன் மூலம் பார்ல் ராயல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் எம்.ஐ.கேப்டவுன் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. அதேசமயம் இந்த தோல்வியின் மூலம் நடப்பு சாம்பியன் எம்.ஐ.கேப்டவுன் அணி இந்த சீசனில் தங்களின் மூன்றாவது தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த போட்டியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.