ETV Bharat / sports

போர்ச்சுகல் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ இடைநீக்கம் | சர்ச்சை பின்னணி என்ன?

தேசிய அணி சிக்கல்களுக்கு மத்தியிலும், அல்-நாஸர் கிளப் போட்டியில் திரியா அணிக்கு எதிராக ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையின் 980ஆவது கோலை அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : October 11, 2026 at 3:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: உலகின் முன்னணி நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அணியின் பயிற்சி முகாமில் இருந்து அனுமதியின்றி வெளியேறியதால், போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு அவரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தால் (UEFA) நடத்தப்படும் புகழ்பெற்ற 2026–27ஆம் ஆண்டுக்கான 'யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக்' கால்பந்து தொடரின் நடப்பு சீசன் கடந்த மாதம் நடைபெற்றது. இத்தொடருக்கான போர்ச்சுகல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றிருந்தார். இருப்பினும், இத்தொடரில் போர்ச்சுகல் அணி விளையாடிய போட்டிகளில் ரொனால்டோவிற்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

குறிப்பாக, கடந்த செப்டம்பர் 28 அன்று நார்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ரொனால்டோ அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், புதிய பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் அவரை மைதானத்தில் இறக்காமல் மாற்று வீரர்களின் வரிசையிலேயே அமர வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பயிற்சியாளர் ஜீசஸ், டென்மார்க் அணிக்கு எதிரான அடுத்த போட்டியிலும் ரொனால்டோ விளையாட மாட்டார் என்று அறிவித்தார்.

இதனையடுத்து, தனக்கு விளையாட வாய்ப்பு தருவதாகக் கூறிவிட்டு பயிற்சியாளர் தனது வாக்குறுதியை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய ரொனால்டோ, கடும் அதிருப்தியுடன் டென்மார்க் போட்டிக்கு முன்பாகவே பயிற்சி முகாமில் இருந்து வெளியேறினார். ரொனால்டோவின் இந்த முடிவு சர்வதேச கால்பந்து அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், ரொனால்டோவின் அடையாளமாகத் திகழும் 'ஜெர்சி எண் 7' வேறொரு வீரருக்கு வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் கொதித்தெழுந்த மில்லியன் கணக்கான ரசிகர்கள், போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடர்வதை நிறுத்தியதுடன், பயிற்சியாளரின் முடிவுக்குக் கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அனுமதியின்றி முகாமில் இருந்து வெளியேறிய ரொனால்டோ மீது போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள அவசர கால விசாரணைக் குழு, ரொனால்டோவிடம் விசாரணை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விசாரணை முடிவடையும் வரை அவர் போர்ச்சுகல் தேசிய அணியில் விளையாடத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் ரொனால்டோவிற்கு நீண்ட கால தடையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, தனது செயலுக்கு சக வீரர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ள ரொனால்டோ, கூட்டமைப்பு வழங்கும் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதே வேளையில், தொடர்ந்து தனது தாய்நாட்டிற்காக விளையாடவே தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க

தேசிய அணியில் சர்ச்சை நீடித்தாலும், சவுதி அரேபியாவின் அல்-நாஸர் கிளப் அணிக்காக ரொனால்டோ தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அந்த வகையில், சவுதி புரோ லீக்கில் திரியா கிளப் அணிக்கு எதிராக ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இது அவருடைய 980ஆவது கோலாகவும் அமைந்தது. இதன் மூலம் அல்-நாஸர் அணி 3-0 என்ற கணக்கில் அந்த போட்டியை வென்றது குறிப்பிடத்தக்கது.