டைமண்ட் லீக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்; காரணம் என்ன?
வாண்டா டைமண்ட் லீக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ராவின் இந்தத் திடீர் விலகல், இந்திய தடகள ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Published : August 29, 2026 at 3:17 PM IST
ஹைதராபாத்: இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, கணுக்கால் காயம் காரணமாக எதிர்வரும் டைமண்ட் லீக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் உட்பட நடப்பு சீசனின் அனைத்து தடகளத் தொடர்களில் இருந்தும் முழுமையாக விலகியுள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்தார். மேலும், இந்திய தடகள வரலாற்றில் ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
விளையாட்டுத் துறையில் அவர் படைத்த சாதனைகளுக்காக, நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான 'மேஜர் தியான் சந்த் கேள் ரத்னா' மற்றும் 'பத்மஸ்ரீ' விருதுகளைப் பெற்று ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களுக்கும் பெரும் முன்மாதிரியாகத் திகழ்கிறார். ஒலிம்பிக், உலக தடகள சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டுகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் எனத் தான் பங்கேற்ற அனைத்து முக்கிய சர்வதேசத் தொடர்களிலும் அவர் முத்திரை பதித்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக, லோஷான் டைமண்ட் லீக் (Lausanne Diamond League) தடகளப் போட்டியில், 88.05 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்தச் சீசனின் மிகச்சிறந்த சாதனையைப் படைத்த கையோடு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். அதன் தொடர்ச்சியாக, பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள வாண்டா டைமண்ட் லீக் இறுதிப் போட்டிக்கும் (Wanda Diamond League Finals) அவர் தகுதி பெற்றிருந்தார்.
மேலும், அவர் அடுத்தடுத்து வரவிருந்த முக்கியப் போட்டிகளுக்காகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், பயிற்சியின் போது அவருக்குக் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவில், நீரஜ் சோப்ராவின் காயம் தீவிரமடைந்தது கண்டறியப்பட்டுள்ளது.
— Neeraj Chopra (@Neeraj_chopra1) August 29, 2026
இதன் காரணமாக தற்போதைக்கு அவர் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, எதிர்வரும் வாண்டா டைமண்ட் லீக் இறுதிப் போட்டி மற்றும் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Asian Games 2026) இருந்து தான் முழுமையாக விலகுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்
இதுகுறித்து நீரஜ் சோப்ரா தனது சமூக வலைதளப் பதிவில், "கடின உழைப்பிற்குப் பிறகு, லோஷான் போட்டியில் எனது இந்தச் சீசனின் சிறந்த எறிதலைப் பதிவு செய்து, நல்லதொரு உத்வேகத்தைப் பெற்றதாக உணர்ந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதன்பின் நடந்த பயிற்சியின் போது எனது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. எனது மருத்துவர் மற்றும் ஆலோசனைக் குழுவினருடன் விரிவாகப் பேசிய பிறகு, எனது உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த 2026 சீசனின் எஞ்சிய அனைத்துப் போட்டிகளில் இருந்தும் விலகுவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன்.
இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது, குறிப்பாக நான் எனது இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இது நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. ஆனால், பின்னடைவுகள் என்பது பயணத்தின் ஒரு பகுதிதான். இப்போது எனது முழுக் கவனமும் நன்றாய் குணமடைந்து, முன்பை விட அதிக வலிமையுடன் மீண்டு வருவதில் மட்டுமே உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்கவும் |
எதிர்வரும் வாண்டா டைமண்ட் லீக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ராவின் இந்தத் திடீர் விலகல், இந்திய தடகள ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, காயத்தில் இருந்து நீரஜ் சோப்ரா விரைவில் குணமடைந்து, மீண்டும் பலத்துடன் களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

