ETV Bharat / sports

WPL 2026: தீப்தி சர்மா வரிசையில் இணைந்து நதின் டி கிளார்க் சாதனை

மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் 4 விக்கெட்டுகள் மற்றும் 50+ ஸ்கோரை எடுத்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை நதின் டி கிளார்க் பெற்றுள்ளார்.

நதின் டி கிளார்க்
நதின் டி கிளார்க் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 10, 2026 at 1:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

நவி மும்பை: மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீ டி20 தொடரின் நான்காவது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தியது. நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சஜீவன் சஞ்சனா 45 ரன்களையும், நிகோலா கேரி 40 ரன்களையும், ஜி கமலினி 32 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நதின் டி கிளார்க் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் கிரேஸ் ஹேரிஸ், ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், தயாளன் ஹேமலதா உள்ளிட்டோர் பெரிதளவில் ரன்களை எடுக்காமல் விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நதின் டி கிளார்க் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவு செய்ததுடன், கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார்.

இதன் மூலம் ஆர்சிபி அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடி 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 63 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த நதின் டி கிளார்க் ஆட்ட நாயகி விருதை வென்றார். மேலும் இந்த போட்டியில் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.

அந்த வகையில், மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரலாற்றில் 4 விக்கெட்டுகள் மற்றும் 50+ ஸ்கோரை எடுத்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2024 ஆம் ஆண்டு இந்திய வீராங்கனை தீப்தி சர்மா பவுலிங்கில் 4 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 59 ரன்களையும் எடுத்து இந்த சாதனையை படைத்திருந்தார். தற்சமயம் நதின் டி கிளார்க்கும் அந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

இது தவிர்த்து மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் பேட்டிங் செய்து அதிகபட்ச ரன்களைக் குவித்த வீராங்கனை என்ற பெருமையையும் நதின் டி கிளார்க் பெற்றுள்ளார். முன்னதாக யுபி வாரியர்ஸ் அணியின் சினேல்லே ஹென்றி 62 ரன்களைச் சேர்த்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது நதின் டி கிளார்க் 63 ரன்களைச் சேர்த்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

WPL-ல் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்கள் (நம்பர் 6)

  • 63*(44) நதீன் டி கிளார்க், RCB vs MI, 2026
  • 62(23) சினேல்லே ஹென்றி, UPW vs DC, 2025
  • 61(27) பாரதி ஃபுல்மாலி, GG vs MI, 2025
  • 59*(26) கிரேஸ் ஹாரிஸ், UPW vs GG, 2025

நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற நிலையில் அதனை எட்டி வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கடைசி ஓவரில் அதிகபட்ச ரன்கள் இலக்கை எட்டிய இரண்டாவது அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. இந்த பட்டியலில் 2023 ஆம் ஆண்டு யுபி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 19 ரன்கள் என்ற இலக்கை எட்டி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.