ETV Bharat / sports

எஸ்ஏ20 லீக்: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்த எம்ஐ கேப்டவுன்

நடப்பு எஸ்.ஏ.20 லீக் தொடரில் எம்.ஐ.கேப்டவுன் அணியானது தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது.

எம்ஐ கேப்டவுன்
எம்ஐ கேப்டவுன் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 7, 2026 at 10:22 AM IST

2 Min Read
Choose ETV Bharat

கேப்டவுன்: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் எம்.ஐ.கேப்டவுன் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ.20 லீக் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று கேப்டவுனில் நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் எம்.ஐ.கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் டாஸை வென்ற கேப்டவுன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் 15 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தியான் ஃபோரெஸ்டரும் 5 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸும் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 44 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் மேத்யூ டி வில்லியர்ஸ் 21 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்களால் பெரிதளவில் ரன்களை எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக சூப்பர் கிங்ஸ் அணி 12 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

கேப்டவுன் அணி தரப்பில் கார்பின் போஷ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய கேப்டவுன் அணியில் ரியான் ரிக்கெல்டன் 5 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ரஸ்ஸி வேண்டர் டுசென் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் 5 சிக்ஸர்களுடன் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ரீஸா ஹென்றிக்ஸ் 6 ரன்களிலும், ஜார்ஜ் லிண்டே 9 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஸ்ஸி வேண்டர் டுசெனும் 35 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேசன் ஸ்மித் 3 சிஸர்களுடன் 22 ரன்களைச் சேர்க்க, இறுதியில் எம்.ஐ.கேப்டவுன் அணியானது 11.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு எஸ்.ஏ.20 லீக் தொடரில் எம்.ஐ.கேப்டவுன் அணியானது தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

இதையும் படிங்க

அதேசமயம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த சீசனில் தங்களுடைய முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இருப்பினும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், கேப்டவுன் அணி கடைசி இடத்தில் தொடர்கிறது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டவுன் அணியின் நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.