மகளிர் பிரீமியர் லீக் 2026: யுபி வாரியர்ஸின் கேப்டன் மெக் லெனிங்!
யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது தனக்கு கிடைத்த பெருமை என்று ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லெனிங் கூறியுள்ளார்.

Published : January 5, 2026 at 1:18 PM IST
ஹைதராபாத்: எதிர் வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான யுபி வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவின் மெக் லெனிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் முனைப்பில் மகளிர் பிரீமியர் லீக் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இதில் 3 சீசன்கள் முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு முறையும் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளன. இதனையடுத்து இந்த தொடரின் நான்காவது சீசன் ஜனவரி 9 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது.
மேலும் இந்த தொடருக்கான வீராங்கனைகள் மெகா ஏலமும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், ஒவ்வொரு அணியும் போட்டிக்கான தீவிர தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் யுபி வாரியர்ஸ் அணியும் தங்கள் வேலைகளைத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, எதிர் வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான யுபி வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவின் மெக் லெனிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
The Blueprint of Success. The Icon of Leadership. Captain 𝐌𝐄𝐆 👑💛#UPWarriorz #UttarDega #TATAWPL #MegLanning pic.twitter.com/hJho7auTc4
— UP Warriorz (@UPWarriorz) January 4, 2026
முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மெக் லெனிங்கை அந்த அணி ஏலத்திற்கு முன்னதாக விடுவித்தது. இதனையடுத்து ஏலத்தில் யுபி வாரியர்ஸ் அணியானது ரூ. 1.9 கோடிக்கு மெக் லெனிங்கை ஏலத்தில் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்சமயம் அவரை அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. இதன் காரணமாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பேசிய லெனிங், "யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்த பெருமை. இது சர்வதேச அனுபவமும், இந்திய வீராங்கனைகளும் நிறைந்த ஒரு திறமையான அணி. வரவிருக்கும் சவாலை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்து, கோப்பையை வெல்வோம்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக கடந்த மூன்று சீசன்களில் செயல்பட்ட மெக் லெனிங், மூன்று சீசன்களிலும் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். இருப்பினும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போனது. இதனையடுத்து வீராங்கனைகள் ஏலத்திற்கு முன்னதாக அவரை அணியில் இருந்தும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விடுவித்திருந்தது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 27 போட்டிகளில் விளையாடியுள்ள மெக் லெனிங், 39.97 என்ற சராசரியில் 9 அரை சதங்களுடன் 952 ரன்களைக் குவித்துள்ளார். இது தவிர முதல் சீசனில் அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு உண்டு. மேலும் 27 போட்டிகளில் டெல்லி அணியை வழி நடத்திய லெனிங் அதில் 17 வெற்றிகளையும், 10 தோல்விகளையும் சந்தித்துள்ளார். அதில் மூன்று இறுதிப் போட்டியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leading with vision. Commanding with class 👑
— UP Warriorz (@UPWarriorz) January 5, 2026
Warriorz’ first training session under Captain Meg 🏏💜 #UPWarriorz #UttarDega #TATAWPL pic.twitter.com/ZlK7sOhloD
இதையும் படிங்க |
யுபி வாரியர்ஸ்: மெக் லானிங் (கேப்டன்), ஸ்வேதா செஹ்ராவத், தீப்தி சர்மா, சோஃபி எக்லெஸ்டோன், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், கிரண் நவ்கிரே, ஹர்லீன் தியோல், கிராந்தி கவுட், ஆஷா ஷோபனா, டீயன்ட்ரா டோட்டின், ஷிகா பாண்டே, ஷிப்ரா கிரி, சிம்ரன் ஷேக், தாரா நோரிஸ், சோலே ட்ரையன், சுமன் மீனா, கொங்காடி திரிஷா, பிரதிகா ராவல்.

