ETV Bharat / sports

ரஞ்சி கோப்பை 2026: தோல்வியை தவிர்க்க போராடும் கர்நாடகா; வரலாறு படைக்க காத்திருக்கும் ஜம்மு காஷ்மீர்

மயங்க் அகர்வால் 124 ரன்களுடனும், கிருத்திக் கிருஷ்ணா 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் அணி
ஜம்மு காஷ்மீர் அணி (PTI)
author img

By ETV Bharat Sports Team

Published : February 26, 2026 at 6:32 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹுப்லி: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியின் நட்சத்திர வீரர் மயங்க் அகர்வால் சதமடித்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார்.

இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் முதன்மையானது ரஞ்சி கோப்பை. இத்தொடரின் 2025-26ஆம் ஆண்டிற்கான சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய இறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த கர்நாடகா அணியை எதிர்த்து, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜம்மு காஷ்மீர் அணி பலப்பரீட்சை நடத்தியது.

ஹுப்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டது. குறிப்பாக அந்த அணியில் ஷுபம் சதம் விளாசியதுடன் 121 ரன்களை சேர்த்தார். மேற்கொண்டு யாவர் ஹசன், அப்துல் சமத், கன்ஹையா வாதவன் மற்றும் கேப்டன் பராஸ் தோக்ரா உள்ளிட்டோர் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினர்.

இதன் மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீர் அணி 584 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. கர்நாடகா அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய கர்நாடகா அணியில் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 13 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தேவ்தத் படிக்கல் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் கருண் நாயர் மற்றும் ஸ்மாறன் ரவிச்சந்திரன் ஆகியோரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் கர்நாடகா அணி 57 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த தொடக்க வீரர் மயங்க் அகர்வால்-ஸ்ரேயாஸ் கோபால் இணை அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

இதில் ஸ்ரேயாஸ் கோபால் ஒருபக்கம் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். பின்னர் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்ரேயாஸ் கோபால் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

இதையும் படிங்க

இதன் காரணமாக கர்நாடகா அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்களை எடுத்துள்ளது. இதில் மயங்க் அகர்வால் 124 ரன்களுடனும், கிருத்திக் கிருஷ்ணா 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஜம்மு அணி தரப்பில் ஆகிப் நபி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 374 ரன்கள் பின் தங்கிய நிலையில் கர்நாடகா அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.