தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் விளாசி மிரட்டிய மேத்யூ ரென்ஷா: சரிவிலிருந்து மீண்ட ஆஸ்திரேலியா!
கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் மேத்யூ ரென்ஷா பெற்றுள்ளார்.


Published : October 10, 2026 at 4:17 PM IST
ஹைதராபாத்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் மேத்யூ ரென்ஷா சதம் விளாசி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், மேத்யூ ரென்ஷா மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது.
இதன் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்திருந்தது. இதையடுத்து, இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை மேத்யூ ரென்ஷா 46 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 33 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ரென்ஷா அரைசதம் கடந்த நிலையில், மறுபுறம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாட் கம்மின்ஸ் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Follow @CricketDani56 https://t.co/mbBrL7BOWB
— Cricket Dani (@CricketDani39) October 10, 2026
அடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க்கும் 7 ரன்களில் நடையைக் கட்டினார். எனினும், மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மேத்யூ ரென்ஷா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் அவர் சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2017-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக மேத்யூ ரென்ஷா தனது முதல் சதத்தை அடித்திருந்தார். அதன்பின், சுமார் 9 ஆண்டுகள் மற்றும் 19 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு தற்போது சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளார். மேலும், கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் விளாசிய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அதிலும் குறிப்பாக, டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பிறகு சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ரென்ஷா பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2009-ல் ஆஸ்திரேலியாவின் பிலிப் ஹியூஸ் இங்கு சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, மேத்யூ ரென்ஷாவின் இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளது.
A second Test century for Matt Renshaw, almost 10 years apart. The latest on his breakthrough Test knock: https://t.co/OJILrURoCR https://t.co/fbUFAI1fcM
— cricket.com.au (@cricketcomau) October 10, 2026
| இதையும் படிங்க |
இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்களைக் குவித்துள்ளது. இதில் ஆட்டமிழக்காமல் உள்ள மேத்யூ ரென்ஷா 102 ரன்களுடனும், நாதன் லையன் 7 ரன்களுடனும் உள்ளனர். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 4 விக்கெட்டுகளையும், ஆன்ரிச் நோர்ட்ஜே மற்றும் மார்கோ ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

