மார்னஸ் லபுஷேன் அதிரடி நீக்கம் | ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம் பிடித்த அறிமுக வீரர்கள் யார்?
எதிர்வரும் உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியத் தொடர்களைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில், நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.


Published : September 1, 2026 at 12:02 PM IST
ஹைதராபாத்: ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களுக்கான பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து, தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 15ஆம் தேதியும், தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 24ஆம் தேதியும் தொடங்கவுள்ளன.
இந்நிலையில், இந்த ஒருநாள் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. எதிர்வரும் உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியத் தொடர்களைக் கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அணியில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஒருநாள் போட்டிகளில் அவரது சுமாரான ஃபார்ம் மற்றும் குறைவான ஸ்டிரைக் ரேட் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவருடன் மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான மேத்யூ ஷார்ட்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
The young guns hold their spots in the Aussie men's ODI squad to take on Zimbabwe and South Africa, but there's a key omission too: https://t.co/uEsR8VkbhV pic.twitter.com/P9vOUuOGeQ
— cricket.com.au (@cricketcomau) August 31, 2026
மூத்த வீரர்களின் நீக்கத்தைத் தொடர்ந்து, உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர்களுக்கு ஆஸ்திரேலிய தேர்வுக்குழு முன்னுரிமை அளித்துள்ளது. அதன்படி, இளம் பேட்ஸ்மேன்களான ஒலி டேவிஸ் மற்றும் ஒலிவர் பீக் ஆகியோர் முதன்முறையாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்த ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பில்லி ஸ்டான்லேக் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
அதேசமயம், காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருந்த அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். மேலும், ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் பேட் கம்மின்ஸ் செயல்படுவார். இருப்பினும், பணிச்சுமை மேலாண்மை காரணமாக கேப்டன் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவருக்கும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜிம்பாப்வே ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷ் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, டிராவிஸ் ஹெட், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா, ஜோஷ் இங்கிலிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன் மற்றும் மேத்யூ ரென்ஷா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் தங்களது இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
இதையும் படிக்கவும் |
ஆஸ்திரேலிய ஒருநாள் அணி : மிட்செல் மார்ஷ் (ஜிம்பாப்வே தொடர் கேப்டன்), பாட் கம்மின்ஸ் (தென்னாப்பிரிக்க தொடர் கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கனோலி, ஜோயல் டேவிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆலிவர் பீக், மேத்யூ ரென்ஷா, பில்லி ஸ்டான்லேக், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

