ETV Bharat / sports

டி20 உலகக் கோப்பை 2026: ஒற்றை ஆளாகப் போராடி இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார் சஞ்சு சாம்சன்

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : March 1, 2026 at 5:00 PM IST

Choose ETV Bharat

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் ஏற்கெனவே குரூப் 2ல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. மறுபக்கம் குரூப் 1-ல் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் செல்ல இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

LIVE FEED

10:47 PM, 1 Mar 2026 (IST)

ஆட்டத்தை முடித்து வைத்த சஞ்சு சாம்சன்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 97 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்

10:40 PM, 1 Mar 2026 (IST)

ஹர்திக் பாண்டியா விக்கெட்

ஹர்திக் பாண்டிய 17 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழக்க, இந்திய அணி 179 ரன்களில் தங்களது 5ஆவது விக்கெட்டை இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி வெற்றி பெற கடைசி 10 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

10:19 PM, 1 Mar 2026 (IST)

சீட்டுக்கட்டாய் சரியும் விக்கெட்டுகள்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி வந்த திலக் வர்மா 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 27 ரன்களை எடுத்த நிலையில், ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஷிம்ரான் ஹெட்மையரின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை சேர்த்துள்ளது.

9:57 PM, 1 Mar 2026 (IST)

சஞ்சு சாம்சன் அரைசதம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடிய சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் அவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தன்னுடைய முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.

9:55 PM, 1 Mar 2026 (IST)

சூர்யகுமார் விக்கெட்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இந்திய அணி 99 ரன்களில் தங்களுடைய 3ஆவது விக்கெட்டை இழந்துள்ளது.

9:27 PM, 1 Mar 2026 (IST)

பவர்பிளேவில் இந்தியா முன்னிலை

அபிஷேக் சர்மா 11 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய இஷான் கிஷனும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் இந்திய அணி பவர்பிளே ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதையடுத்து சஞ்சு சாம்சனுடன் இணைந்துள்ள கேப்டன் சூர்யகுமார் யாதவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து வருகிறார்.

இதன் காரணமாக பவர்பிளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்களை சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகீல் ஹொசைன் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

9:14 PM, 1 Mar 2026 (IST)

மீண்டும் ஏமாற்றமளித்த அபிஷேக்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார்.

அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாட முயற்சித்த அபிஷேக் சர்மா 11 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் அதில் 10 ரன்களை மட்டுமே எடுத்து அகீல் ஹொசைன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக இந்திய அணி 29 ரன்களில் தங்களுடைய முதல் விக்கெட்டை இழந்தது.

8:41 PM, 1 Mar 2026 (IST)

இந்திய அணிக்கு 196 ரன்கள் இலக்கு..

இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை சேர்த்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோவ்மன் பாவெல் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 34 ரன்களை சேர்த்தார்.

மறுபக்கம் ஜேசன் ஹோல்டர் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 37 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடவுள்ளது.

8:26 PM, 1 Mar 2026 (IST)

ஒரே ஓவரில் 24 ரன்களை விளாசிய பாவெல்

அர்ஷ்தீப் சிங் வீசிய இன்னிங்ஸின் 16ஆவது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்களை விளாசியது. இதில் அர்ஷ்தீப் சிங் பவுன்சர் வீசும் முயற்சியில் வைட் வீசியதுடன் அந்த பந்து பவுண்டரிக்கும் சென்றது. அதனைத் தொடர்ந்து ரோவ்மன் பாவெல் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாச, அந்த ஓவரில் மொத்தமாக 24 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி சேர்த்தது.

7:58 PM, 1 Mar 2026 (IST)

அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிம்ரான் ஹெட்மையர் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 27 ரன்களை சேர்த்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அதனைத் தொடர்ந்து நிதானமாக விளையாடி வந்த ரோஸ்டன் சேஸ் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 40 ரன்களை சேர்த்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் கேப்டன் சூர்யகுமார் யாதவின் அபாரமான கேட்ச்சின் மூலம் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

7:52 PM, 1 Mar 2026 (IST)

ஷிம்ரான் ஹெட்மையர் சிக்ஸர் மழை

இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் ஷிம்ரான் ஹெட்மையர் தற்போது வரையிலும் இரண்டு சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ஹெட்மையர் பெற்றுள்ளார். முன்னதாக பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் 18 சிக்ஸர்களை அடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் ஹெட்மையர் 19 சிக்ஸர்களை விளாசி அதனை முறியடித்துள்ளார்.

ஒரு டி20 உலகக் கோப்பை சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

19-ஷிம்ரான் ஹெட்மையர் (வெஸ்ட் இண்டீஸ்) (2026)*

18 -சாஹிப்சாதா ஃபர்ஹான் (பாகிஸ்தான்) (2026)

17 -நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) (2024)

16 -கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்)(2012)

16 -ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆஃப்கானிஸ்தான்) (2024)

7:41 PM, 1 Mar 2026 (IST)

வருண் சக்ரவர்த்தி மேஜிக்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷாய் ஹோப் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்களை சேர்த்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்திய அணி தங்களுடைய முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளது.

7:25 PM, 1 Mar 2026 (IST)

ஹோப்-சேஸ் நிதானம்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதுடன், விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதன் காரணமாக பவர்பிளே ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்களை எடுத்துள்ளது.

6:39 PM, 1 Mar 2026 (IST)

மாற்றமின்றி களமிறங்கும் இந்தியா..இரு அணிகளின் பிளேயிங் லெவன்

இந்தியா பிளேயிங் லெவன்: சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: ஷாய் ஹோப்(கேப்டன்), ரோஸ்டன் சேஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஜேசன் ஹோல்டர், மேத்யூ ஃபோர்ட், அகீல் ஹொசைன், குடகேஷ் மோட்டி, ஷமார் ஜோசப்.

6:31 PM, 1 Mar 2026 (IST)

டாஸை வென்ற சூர்யா..

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மற்றமும் இல்லாத நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங்கிற்கு மாற்றாக அகீல் ஹொசைன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்லார்.

6:28 PM, 1 Mar 2026 (IST)

ஈடன் கார்டன்ஸ் மைதானம் எப்படி?

கொல்கத்தாவில் அமைந்துள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானம் வரலாற்றில் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக இருந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அதிரடியான அனுகுமுறையை பின்பற்ற வாய்ப்புள்ளது. அதேசமயம் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதுதவிர போட்டி இரவு நேரத்தில் நடைபெற இருப்பதால் பனியின் தாக்கமும் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இங்கு இதுவரை 18 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 9 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணிகள் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

5:34 PM, 1 Mar 2026 (IST)

நேருக்கு நேர்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 30 முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. அதில் இந்திய அணி 19 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 10 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒரு போட்டியானது டிராவில் முடிந்துள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரை பொறுத்தமட்டில் இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

5:03 PM, 1 Mar 2026 (IST)

போட்டி எப்போது?

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இந்த சூப்பர் 8 சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. மேலும் இந்த போட்டியின் டாஸ் நிகழ்வானது மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.