டி20 உலகக் கோப்பை 2026: ஜிம்பாப்வேவை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய இந்தியா


Published : February 26, 2026 at 10:13 PM IST
|Updated : February 26, 2026 at 10:40 PM IST
சென்னையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. இதில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 55 ரன்களும், இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா 23 பந்துகளில் 50 ரன்களும் விளாசினர்.
இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 257 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி 254 ரன்களை குவித்ததே சாதனையாக இருந்த நிலையில், இந்திய அணி அதனை முறியடித்துள்ளது.
LIVE FEED
ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்கான வாய்ப்பையும் இந்திய அணி தக்கவைத்துள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 257 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
ஜிம்பாப்வே அணி பேட்டிங்கில் அபாரமாக விளையாடிய பிரையன் பென்னட் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 97 ரன்களை சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
சதத்தை தவறவிட்ட பிரையன் பென்னட்
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே வீரர் பிரையன் பென்னட் அபாரமாக விளையாடி 97 ரன்கள் குவித்து, சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இந்த இன்னிங்ஸில் அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களையும் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்படி அந்த ஓவரில் இரண்டாவது பந்தில் சிக்கந்தர் ரஸாவின் விக்கெட்டை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், ஓவரின் 4ஆவது பந்தில் ரியான் பர்லின் விக்கெட்டை கைப்பற்றினார்.

